Our Feeds


Wednesday, July 9, 2025

SHAHNI RAMEES

உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிப்பான்! - சுந்தரலிங்கம் பிரதீப்

 


உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிப்பான் தப்பு

செய்தவன் தண்டனை பெறுவான் என்ற வகையில் தப்பு செய்த எவரும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடமிருந்து ஒருபோதும் தப்ப முடியாது என பெருந்தோட்ட, சமூக உட்கட்டமைப்பு பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் 8ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற  இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானியின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.


அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், 


அன்று நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்தவர்களே இன்று நல்லவர்கள் போல் நடிக்கின்றார்கள். சிறையில் இருக்க வேண்டியவர்கள் இன்று பாராளுமன்றத்தில் இருந்து நாட்டையும் நாட்டு மக்களையும் குழப்புகின்ற நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பது வேடிக்கையானது. 


உள்நாட்டில் ஏற்பட்ட உப்புத் தட்டுப்பாடு தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.  எமது நாடு நான்கு பக்கமும் கடலில் சூழப்பட்ட தீவு என்பதால் கடந்த காலங்களில் எமது நாட்டுக்கு தேவையான உப்பு இங்கு உற்பத்தி செய்யப்பட்டது. அது மக்களின் மொத்த தேவையையும் பூர்த்தி செய்தது.எனினும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிலவிய காலநிலை காரணமாக நாட்டில் உப்புத் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதனையடுத்து உப்பு இறக்குமதிக்காக விதிக்கப்பட்டிருந்த தடைகள் நீக்கப்பட்டு உப்பு இறக்குமதிக்கு  வாய்ப்பு வழங்கப்பட்டது. 



எனினும் இந்த உப்புத் தட்டுப்பாட்டை வைத்து எதிர்க்கட்சியினர் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்கள். வருடம் ஒன்றிற்கு ஒரு இலட்சத்து 80 ஆயிரம் தொன் உப்பு உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது.எனினும் நாட்டின் தேவைக்கு இரண்டு இலட்சம் தொன் உப்பு தேவைப்படுகிறது.வீட்டு சமையல் மற்றும் கைத்தொழில் துறை தேவைகளுக்காக உப்பு பயன்படுத்தப்படுகிறது. அதனை அடிப்படையாகக் கொண்டே உப்பை இறக்குமதி செய்யும் தேவை ஏற்பட்டது.


எனினும் இந்த உப்புத் தட்டுப்பாட்டை தேசிய மக்கள் சக்தி அரசாங்கமே ஏற்படுத்தியது என எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி கருத்துக்களை தெரிவித்தார்கள். முதலில் அரிசி தட்டுப்பாடு, பின்பு தேங்காய் தட்டுப்பாடு என சகல தட்டுப்பாடுகளுக்கும் அவர்கள் தற்போதைய அரசாங்கத்தையே குற்றம் கூறி வருகின்றார்கள். உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிப்பான் தப்பு செய்தவன் தண்டனை பெறுவான்” என்ற வகையில் தப்பு செய்த எவரும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடமிருந்து ஒருபோதும் தப்ப முடியாது. ‘உப்பில்லாப் பண்டம் குப்பையிலே’ என்பது போல் தற்போது மக்கள் செல்வாக்கு இல்லாத எதிர்க்கட்சியும் குப்பைக்கு சமமான நிலையிலேயே உள்ளது. அவர்களின் கூற்றுக்களை நாட்டு மக்கள் தற்போது கண்டுகொள்வதில்லை.


கடந்த காலங்களில் சரியான திட்டங்கள் இவர்களிடம் காணப்படவில்லை. நாட்டுக்குத் தேவையானதை திட்டமிட்டு செய்யத் தவறியதாலேயே நாட்டில் தட்டுப்பாடுகள் ஏற்படுவதற்கு காரணமாயின.


எமது நாட்டில் புத்தளம் ஆனையிறவு ஹம்பாந்தோட்டை, மன்னார் போன்ற பகுதிகளிலேயே பிரதான உப்பளங்கள் காணப்படுகின்றன. இங்கு இன்னும் கூட பாரம்பரிய முறையில் தான் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. 



எமது அரசாங்கமே தற்போது ஆனையிறவில் நவீன முறையில் உப்பு உற்பத்தியை முன்னெடுக்கின்றது. அந்த வகையில் நாட்டில் தற்போது தட்டுப்பாடு இன்றி சதொச ஊடாக தேவையான அளவு உப்பு விற்பனை செய்யப்படுகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »