Our Feeds


Tuesday, July 15, 2025

Zameera

தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீடத்தில் மாணவர்கள் மீது தாக்குதல்

பாறுக் ஷிஹான்

ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட 1ம் வருட மாணவர்கள் மீது சிரேஷ்ட மாணவர்கள் மேற்கொண்ட தாக்குதலில் 9 மாணவர்கள் இரு வேறு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

செவ்வாய்க்கிழமை (14) இரவு அம்பாறை மாவட்டம் ஒலுவில் பகுதியில் உள்ள தென்கிழக்கு வளாகத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் மீது இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

இதன் போது காயமடைந்த 5 மாணவர்கள் ஒலுவில் பிரதேச வைத்தியசாலையிலும் ஏனைய 4 மாணவர்கள் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கடந்த மாதமும் முதலாமாண்டு மாணவர்களை பகிடிவதை செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ஒலுவில் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தைச் சேர்ந்த 22 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக குறித்த பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதே வேளை இலங்கை தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முதலாமாண்டு மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கடுமையான பகிடிவதை தொடர்பான காணொளி ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்தது.இதில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மூன்றாம் ஆண்டில் பயிலும் மாணவர்கள் குழுவொன்று முதலாமாண்டு மாணவர்களின் அறைகளுக்குள் நுழைந்து முழந்தாளிடச் செய்து கடுமையாக துன்புறுத்தி தாக்கும் வகையிலான அக்காணொளி அமைந்திருந்ததது.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »