Our Feeds


Monday, August 25, 2025

Sri Lanka

குருக்கள்மடம் மனிதப்புதைகுழியை தோண்ட உத்தரவு!


1990ஆம் ஆண்டு குருக்கள்மடத்தில் வைத்து அப்பாவி முஸ்லிம்கள் கொலை செய்­யப்­பட்டு புதைக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணை, இன்று (25) திங்கட்கிழமை களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பீ ஏ.ரஞ்சித்குமார் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

1990ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரையை முடித்துக் கொண்டு கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த அப்பாவி முஸ்லிம்கள், ஆயுததாரிகளால் கடத்தப்பட்டு, குருக்கள்மடத்தில் வைத்துக் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பம் சார்பாக, AMM. ரவூப் என்பவரால், களுவாஞ்சிக்குடி காவல் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணையே இன்று விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ள படி, உரிய இடத்தில் புதைக்கப்பட்டுள்ள மனித எச்சங்களைத் தோண்டி எடுப்பதற்கான கட்டளையை நீதிவான் நீதிமன்ற நீதிபதியால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது சம்பந்தமான மேலதிக நடவடிக்கைகளை களுவாஞ்சிக்குடி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், சம்பவ இடமான குருக்கள்மடம் கடற்கரை வீதியின் ,கடற்கரை எல்லைப் பிரதேசத்திற்கு விஜயம் செய்த களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தின் நீதவான் நீதிபதி ஜே.பீ ஏ.ரஞ்சித்குமார், சம்பவ இடத்தினைச் சந்தேகிக்கப்படும் இடமாக அடையாளப்படுத்தியதுடன், அவ்விடத்தை பாதுகாப்பு வலயமாகவும் பிரகடனப்படுத்தி, அவ்விடத்திற்குக் காவல்துறை பாதுகாப்பு வழங்குமாறும் களுவாஞ்சிக்குடி காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, இந்த வழக்கு நாளை (26) காலை 9.30 அளவில் மீள் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »