கிழக்கில் அக்கரைப்பற்று பிரதேசத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சவுதி அரேபிய அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகள் இன்னும் பகிர்ந்தளிக்கப்படாமல் இருக்கின்றன. நீண்ட காலமாக இழுபறி நிலையில் உள்ள இந்த விவகாரத்தில் உடனடி கவனம் செலுத்தி, பாராளுமன்ற குழு ஒன்றை அமைத்தாவது, அது தொடர்பில் ஆராய்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்த வீடுகளை கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என காதர் மஸ்தான் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (06) இடம்பெற்ற பிரதமரிடமான கேள்வி நேரத்தின் போது உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
இலங்கையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களில் சவுதி அரேபியாவின் 1500 மில்லியன் ரூபா நிதியில் அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்குவதற்காக 500 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
எனினும் அந்த வீடுகள் மாவட்டத்தின் இன விகிதாசார அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கின் அடிப்படையில் கடந்த 20 வருடங்களாக அந்த வீடுகள் பகிர்ந்தளிக்கப்படாத நிலையில் காணப்படுகின்றன.
அந்த வீடமைப்பு நிர்மாண பிரதேசம் தற்போது பெரும் காடாகி காணப்படுகிறது.
அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவினால் மேற்கொள்ளப்பட்டுள்ள மாவட்ட விகிதாசார அடிப்படையில்தான் இந்த வீடுகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் தொடர்பில் சட்டமா அதிபர் மூலமாக உயர் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி உயர் நீதிமன்றத்தினால் அதற்கான தீர்மானம் எதுவும் வழங்கப்பட்டுள்ளதா? என்பது தொடர்பில் தெரிவிக்கப்பட வேண்டும்.
அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 308 குடும்பங்கள் காணப்படுகின்றன. அந்த குடும்பங்களுக்கு மேற்படி வீடுகள் வழங்கப்பட வேண்டும் என சம்பந்தப்பட்ட நாடு என சிபாரிசு செய்துள்ளது.
அந்த வகையில் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த விடயம் தொடர்பாக ஆராய்ந்து அவற்றை பகிர்ந்த ளிப்பதற்கான பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதற்காக பாராளுமன்ற குழு ஒன்றை நியமிப்பது பொருத்தமானது என்றார்.
