பொலிஸில் குற்றச்செயல்களில் ஈடுபடும் பலர் இருந்தனர். ஆனால் எனது பதவி காலத்தில் அவ்வாறான குற்றச்செயல்கள் இடம்பெறாது. அதற்கு நான் ஒருபோதும் இடமளிக்க போவதில்லை. அதேபோன்று பொலிஸார் ஒழுக்கத்துடன் செயற்பட வேண்டும்.
பொலிஸார் மீது பொதுமக்களின் நம்பிக்கையை வலுப்படுத்த முடியுமான அனைத்து நடவடிக்கைகளையும் நான் முன்னெடுப்பேன். எமது அதிகாரிகள் தவறிழைத்திருந்தாலோ அல்லது பொதுமக்களுக்கு சேவை வழங்க பின் நிற்பார்களாயின் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்திருந்தார்.
நாட்டின் 37 ஆவது பொலிஸ் மாஅதிபராக சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய நியமனக் கடிதத்தை ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்தித்த சனத் குமாநாயக்கவிடமிருந்து பெற்றுக் கொண்டார்.
இதற்கமைய பொலிஸ் கான்ஸ்டபிள் உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஆகிய 3 பதவிகளையும் வகித்து பொலிஸ் மாஅதிபராக நியமிக்கப்பட்ட முதலாவது பொலிஸ் மாஅதிபராக வரலாற்றில் இடம்பிடித்த சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய இன்று தமது கடமைகளைப் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்று கொண்டார்.
இதற்கான நிகழ்வு பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்றதுடன் பொலிஸாரின் மரியாதை அணிவகுப்புக்கு மத்தியில் அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். இதன்போது பிரதி பொலிஸ் மாஅதிபர்கள் உயர் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர்.
இங்கு விசேட உரையாற்றிய போதே பொலிஸ் மா அதிபர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
பொலிஸ் திணைக்களத்தில் கடமையாற்றும் அனைவரும் சமமானவர்கள்.குற்றங்களுக்கு எதிராக செயற்படுவதே பொலிஸ் திணைக்களத்தின் மிக முக்கிய நோக்கமாகும். நம்பிக்கையுடன் வாழக்கூடிய அமைதியான சூழலை உருவாக்குவதும் அதனை யதார்த்தமாக்குவதுமே நான் உள்ளிட்ட பொலிஸ் திணைக்களத்தின் பொறுப்பாகும். அதனை நிறைவேற்ற நான் எதிர்பார்க்கிறேன்.
நாட்டில் வாழ முடியாத மற்றும் தனது பெயரில் வாழ முடியாத போதைப்பொருள் கடத்தல்காரர்கள் வெளிநாட்டில் தலைமறைவாகி நாட்டில் திட்டமிட்ட குற்றச் செயல்களை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை காலமும் கிடைக்கப்பெற்ற அரசியல் அடைக்கலத்தை பயன்படுத்தியே அவர்கள் அதனை செய்து வந்தனர்.
இதற்காக அவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள், முப்படைகளில் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் மற்றும் சில பொலிஸ் உத்தியோகத்தர்களை யும் பயன்படுத்தி கொள்கிறார்கள்.
நாம் இது தொடர்பில் தகவல்களை திரட்டியுள்ளோம். குற்றவாளிகளுக்கு தற்போது அரசியல் பாதுகாப்பு இல்லாமல் போயுள்ளது. இதற்கு முன்னர் தமக்கு அரசியல் பாதுகாப்பை வழங்கியவர்களை பயன்படுத்தி தமது செயற்பாடுகளை முன்னெடுக்க தற்போது முயற்சிக்கின்றனர். இது தொடர்பில் நாம் ஆராய்ந்து எதிர்காலத்தில் தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுப்போம்.
பொலிஸில் குற்றச்செயல்களில் ஈடுபடும் பலர் இருந்தனர். ஆனால் எனது பதவி காலத்தில் இவ்வாறான குற்றச்செயல்கள் இடம்பெறாது. அதற்கு நான் ஒருபோதும் இடமளிக்க போவதில்லை.பொலிஸ் அதிகாரி ஒருவர் குற்றச்செயலில் ஈடுபட்டால் அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவோம்.
அதேபோன்று பொலிஸார் ஒழுக்கத்துடன் செயற்பட வேண்டும். பொதுமக்களின் நம்பிக்கையை வலுப்படுத்த என்னால் ஆன அனைத்து நடவடிக்கைகளையும் நான் முன்னெடுப்பேன். எமது அதிகாரிகள் தவறிழைத்திருந்தால் பொதுமக்களுக்கு சேவை வழங்க பின்நிற்பார்களாயின் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க ஒருபோதும் தயங்கபோவதில்லை.
பொலிஸாரினால் மக்களுக்கு கடமை ஆற்றப்படவில்லையெனில் அது தொடர்பில் முறையிடுவதற்கும் பொலிஸ் தொலைபேசி இலக்கமொன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளோம்.
அதன் ஊடாக எனக்கு தகவல்களை அனுப்பலாம். குற்றச்செயல்களை தடுக்க திட்டங்களை வகுத்துள்ளோம். வெளிநாட்டில் தலைமறைவாகியிருந்த 11 பேரை நாட்டுக்கு அழைத்து வந்து சிறையில் அடைத்துள்ளோம்.
எதிர்காலத்தில் அவர்கள் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முடியாதவாறு அவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கையை எடுப்போம். இலங்கை பொலிஸார் தொடர்பில் சர்வதேச ரீதியில் நன்மதிப்பு உள்ளது. ஆனால் பொலிஸில் சில குறைப்பாடுகள் உள்ளன. அவற்றை தூய்மைப்படுத்த வேண்டிய பொறுப்பு உள்ளது என்றார்.
