Our Feeds


Friday, August 8, 2025

SHAHNI RAMEES

சிறையில் இருந்து பிள்ளையானால் அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பில் விசாரணை!



சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையான்

என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனால், அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் தொடர்பில் மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதனிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணை நடத்தியுள்ளனர். 


மட்டக்களப்பில் புணர் நிர்மாணிக்கப்பட்ட பொது நூலகத்தை திறந்து மக்கள் பாவனைக்கு கையளிக்குமாறு வலியுறுத்தி, சிறையில் உள்ள பிள்ளையான் கையெழுத்திட்ட கடிதம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியிருந்தது. 


அந்த கடிதம் கடந்த 30ஆம் திகதி மட்டக்களப்பு மாநகர முதல்வருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக குறித்த கடிதம் மூலம் தெரியவருகிறது. 


இதனையடுத்தே அந்த கடிதம் தொடர்பாக மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதனிடம், குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் நேற்று வாக்குமூலம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 


முன்னாள் இராஜாங்க அமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையான் என்றழைக்கப்படும் சி.சந்திரகாந்தன் முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, கடந்த ஏப்ரல் 6ஆம் திகதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். 


பின்னர் அவர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். 


பிள்ளையான் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள சூழலில், அவரால் கடிதம் ஒன்று அனுப்பட்டதாக கூறி சமூக வலைத்தளங்களில் வௌியிடப்பட்டுள்ளமை தொடர்பில், குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மாநகரசபைக்கு சென்று, மாநகரசபை முதல்வரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.


-மட்டக்களப்பு நிருபர் சரவணன்-

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »