Our Feeds


Tuesday, August 19, 2025

Zameera

அரசாங்கம் தோல்வியடைந்து விட்டது - காவிந்த ஜயவர்தன


வளமான நாடு அழகான எதிர்காலம் எனக் கூறிக் கொண்டு புதிய நீர் குழாயை திறந்து வைப்பதற்கும், நிறுத்தப்பட்டிருந்த பேரூந்து சேவையை மீள ஆரம்பிப்பதற்கும் அரசாங்கம் ஆடம்பரமான ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறது. ஆனால் நாட்டு மக்கள் வாழக் கூடிய பொருளாதார சூழல் இன்று இல்லை. இந்த அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது என்பதை முழு நாடும் ஏற்றுக் கொண்டிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.

கொழும்பில் திங்கட்கிழமை (18) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டு மக்கள் வாழக்கூடிய பொருளாதார நிலைமை தற்போது இல்லை. பாதாள உலகக் கும்பலால் நாளொன்றுக்கு ஒருவர் அல்லது இருவர் கொல்லப்படுவது தற்போது சாதாரண விடயமாகியுள்ளது.

நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்களும், வேலை நிறுத்த போராட்டங்களும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. மறுபுறம் வடக்கில் ஹர்த்தால் முன்னெடுக்கப்படுகிறது.

தபால் ஊழியர்கள், மீனவர்கள், விசாயிகள், பட்டதாரிகள் என அனைவரும் இன்று வீதியில் தான் இருக்கின்றனர். அதேபோன்று பாதாள உலகக் குழுக்களும், போதைப்பொருள் கடத்தல்காரர்களும், கொள்ளையர்களும் கூட வீதியில் தான் இருக்கின்றனர்.

அபிவிருத்தி எனக் கூறிக் கொண்டு பேரூந்து சேவையொன்றை ஆடம்பரமாக ஆரம்பித்து வைப்பதற்கு தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்கின்றார்.

பிரிதொரு பாராளுமன்ற உறுப்பினர் நீர் குழாய்; திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக மேள தாளங்களுடன் செல்கின்றார். இதுவே வளமான நாடு அழகான எதிர்காலமாகும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயத்தை வழங்குவதாக தேசிய மக்கள் சக்தி வாக்குறுதியளித்துள்ளது. ஆனால் தாக்குதல்கள் இடம்பெற்ற போது கிழக்கு கட்டளை தளபதியாக செயற்பட்ட இராணுவ அதிகாரி இன்று பிரதி பாதுகாப்பு அமைச்சராக பதவி வகிக்கின்றார்.

நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொள்வதற்கு அஞ்சி, அது தொடர்பில் தவறான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். பொய்யான காரணிகளைக் கூறி அதனை விவாதத்துக்கு எடுத்துக் கொள்வதை கால தாமதப்படுத்துகின்றனர்.

தமக்கு பொருளாதார அறிவில்லாததால் கலாநிதி ஹர்ஷ டி சில்வா மீது சேறு பூசுகின்றனர். எதிர்க்கட்சி உறுப்பினர்களை எதிர்கொள்ள முடியாததால் அவர்கள் மீது சேறு பூசி, அவர்களை முடக்க முயற்சிக்கின்றனர்.

4 பில்லியன் டொலரை வழங்கி வீழ்ச்சியடைந்திருந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான முதல் அடியை எடுத்து வைப்பதற்கு இந்தியா எமக்கு உதவியது.

அந்த நாட்டுக்கு வரி சலுகை கிடைக்காதததை எண்ணி கவலையடைய வேண்டிய அரசாங்கம் இந்தியாவைக் கண்டு நகைக்கின்றது. இது தொடர்பில் கலாநிதி ஹர்ஷ எடுத்துக்கூறியதால், அவரை ஒரு துரோகியைப் போன்று சித்தரிக்கின்றனர். இந்த அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது என்பதை தற்போது முழு நாடும் ஏற்றுக் கொண்டுள்ளது என்றார். 


(எம்.மனோசித்ரா)

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »