Our Feeds


Saturday, August 30, 2025

Sri Lanka

எதிர்க்கட்சிகள் மீதான அரசியல் பழிவாங்கலை விடுத்து பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்!


அரசாங்கம் அதன் ஊழல், மோசடிகளை மறைப்பதற்காக அதிகாரத்தைப் பயன்படுத்த முயற்சிக்கிறது. இவ்வாறு அரசாங்கத்தின் அதிகார துஷ்பிரயோகத்துக்கு எதிராகவும், அடக்குமுறைகளுக்கு எதிராகவும் குரல் கொடுப்பதற்காகவே எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. எதிர்க்கட்சிகள் மீதான அரசியல் பழிவாங்கலை விடுத்து பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க வலியுறுத்தினார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில்  வெள்ளிக்கிழமை (29)  இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசாங்கத்தின் அடக்குமுறைகளை ஒழிப்பதற்கு பல்வேறு கட்சிகளுடன் இணைந்து செயற்படுகின்றோம். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைத்துவத்தில் ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட பிரதான கட்சிகள் இணைந்து செயற்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எமது நோக்கம் அடக்குமுறைகளுக்கு எதிராக செயற்படுவதாகும்.

அரசாங்கம் அதன் ஊழல், மோசடிகளை மறைப்பதற்காக அதிகாரத்தைப் பயன்படுத்த முயற்சிக்கிறது. இவ்வாறு அரசாங்கத்தின் அதிகார துஷ்பிரயோகத்துக்கு எதிராகவும் நாம் ஒன்றிணைந்து குரல் கொடுப்போம். 

பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகளும் எம்முடன் இணைந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அரசியல் ரீதியான கொள்கைகளில் எம்க்கிடையில் வேறுபாடு காணப்படுகின்ற போதிலும், இந்த விவகாரத்தில் நாம் இணைந்து செயற்பட தயாராகவே இருக்கின்றோம்.

நீதிமன்ற வளாகத்தில் ஒன்று கூடிய ஆதரவாளர்களால் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு எவ்வித இடையூறும் விளைவிக்கப்படவில்லை. நீதிமன்றத்துக்கு பொது மக்கள் செல்வதற்கு எவ்வித தடையும் இல்லை. 

சட்டத்திலும் அதற்கான ஏற்பாடுகள் இல்லை. அவ்வாறிருக்கையில் அன்றைய தினம் பொது மக்கள் உட்பட மேலும் பலருக்கு நீதிமன்றத்துக்குள் செல்வதற்கு தடையை ஏற்படுத்தியது யார்?

வீதிகளைக் கூட வீதித்தடைகள் மூலம் மூடி பொலிஸாரே தடையை ஏற்படுத்தினர். மாறாக மக்கள் எவ்வித தடையையும் ஏற்படுத்தவில்லை. எவ்வாறிருப்பினும் அன்றைய தினம் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

அவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டால் அதனை நாம் எதிர்க்கப் போவதில்லை. ஆனால் நீதிமன்ற வளாகத்தில் ஒன்று கூடியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது.

ரணில் விக்கிரமசிங்க ஒரு பிரபலமான நபராவார். எனவே தான் அவர் தொடர்பான வழக்கு விசாரணைகளின் போது மக்கள் ஆர்வமாக இருந்தனர். அந்த அடிப்படையிலேயே நீதிமன்ற வளாகத்திலும் ஒன்று கூடினர். 

அது தவறு என எந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது? அரசியல் பழிவாங்கல்களின் மாத்திரமே அரசாங்கம் அவதானம் செலுத்தி வருகிறது. 

அதனை விடுத்து நாட்டில் இடம்பெறும் குற்றச்செயல்களை தடுப்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? எனவே அரசியல் பழிவாங்கலை விடுத்து மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »