ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,411 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 3,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானின் கிழக்கு மற்றும் பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள குனார் மாகாணத்தில், ஞாயிற்றுக்கிழமை (31) நள்ளிரவு 12:47 மணியளவில் 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து 4.7, 4.3 மற்றும் 5.0 ரிக்டர் அளவுகளிலும் பல நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
நள்ளிரவில் மக்கள் உறங்கிக்கொண்டிருந்ததால், நிலநடுக்கத்தின் தாக்கத்தால் அச்சமடைந்த பெரும்பாலானோர் வீடுகளை விட்டு வெளியேறி திறந்தவெளிகளில் தஞ்சம் அடைந்தனர். களிமண் மற்றும் கற்களால் கட்டப்பட்ட வீடுகள் நிலநடுக்கத்தின் சக்தியைத் தாங்க முடியாமல் எளிதில் இடிந்து விழுந்தன.
இந்த நிலநடுக்கம் மற்றும் தொடர்ச்சியான நில அதிர்வுகளால், குனார் மாகாணத்தில் உள்ள நூர்கல், சவ்கே மற்றும் வதபூர் ஆகிய மூன்று மாவட்டங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டன.
இந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,411 ஆகவும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,000 க்கும் அதிகமாகவும் உயர்வடைந்துள்ளது.
