அனுராதபுரம் தம்புத்தேகமதான் அமைச்சர் வசந்த சமரசிங்கவின் சொந்த இடம்.அவருக்கு தம்புத்தேகம நகரில் சொந்தமாக பல காணிகள்.
அவை குடும்பச் சொத்து.
ஒரு காணியில் 1997ம் ஆண்டே சுய தொழிலைத் தொடங்கிவிட்டார் வசந்த.அவர் பல்கலைக்கழக மாணவனாக இருக்கும்போது. என்ன அந்த தொழில்.? தனியார் வகுப்பு நிலையம்.
தனது நண்பர்களுடன் சேர்ந்து ஓலை கொட்டகை ஒன்றை அமைத்தே தொடங்குகிறார் அந்த நிலையத்தை. அமர்ந்து படிப்பதற்கு தென்னங் கட்டைகள்.மேலே ஓலை கூரை. இதுதான் அந்த நிலையத்தின் ஆரம்பக் கட்டம். அடுத்த கட்டம் தகரக் கூரை. அதற்கு அடுத்த கட்டம் மாடிக் கட்டடம். கட்டங் கட்டமாக வளர்கிறது அந்தக் கல்வி நிலையம்.இன்று அது ஆல மரமாக - பாரிய கட்டடமாக...
28 வருட முயற்சி.ஒரு பல்கலைக்கழக மாணவனின் அயராத உழைப்பு. சமூக சேவைக்கு அரசியல்.சோற்றுக்கு சுய தொழில்.
ஒரு பக்கம் அரசியல் .மறுபக்கம் சுய தொழில். அந்தக் கட்டடத்தின் மதிப்பு இப்போது கோடிக் கணக்கில். நான்கு வருடங்களுக்கு முன் அந்தக் கட்டடத்தை விலைக்குக் கேட்டார் ஒருவர். அப்போதே அவர் நிர்ணயித்த விலை 10 கோடி ரூபா.ஆனால்,அதன் விலை அதைவிட அதிகம்.
நகரில் இருக்கும் பெரிய மாடிக் கட்டடம்.நாளுக்கு நாள் அதன் விலை ஏறிக்கொண்டே போகும். அடுத்து இன்னொரு கட்டடம். அதுவும் அவரது பெற்றோர் வழிச் சொத்துதான். தாய் வீடு. தாய் இறந்ததும் அந்த வீட்டை நான்கு மாடிக் கட்டடமாக அபிவிருத்தி செய்தார்.அதுவும் RDB வங்கியில் கடன் எடுத்து...
அந்தக் கட்டடத்தின் தற்போதைய விலை 22.5 கோடி ரூபா. உயர் தரம் படிக்கும்போதே ரயிலில் வர்த்தகம் செய்தவர். அதன் தொடர்ச்சியாக பல்கலைக்கழகம் சென்றும் தொழிலைத் தொடர்ந்தார்.
சிறந்த கல்விமான் - தொழில் முயற்சியாளர். இந்த சொத்து விபரங்களை தான் அமைச்சுப் பதவியை கையேற்பதற்கு முன் லஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் ஒப்படைத்தார் வசந்த .
ஆணைக்குழு இப்போதுதான் அதை அவர்களின் இணையதளத்தில் பதிவேற்றியுள்ளது. இதைக் கண்ட எதிர்க்கட்சிகள் - உப்பும் தெரியாமல் புளியும் தெரியாமல் துள்ளுகின்றன.
இவர்களின் அறிவீனத்தை நினைத்து சிரிப்பதா அல்லது அரசுக்கு எதிராக ஒரு குற்றச்சாட்டும் கிடைக்காமல் வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதை நினைத்து சிரிப்பதா. இந்தச் சொத்து சேர்ப்பில் இவர்கள் கண்ட பிழை என்ன? இவர்கள் கண்டு பிடித்த ஊழல் என்ன?
உயர் தரம் படிக்கும் காலத்தில் இருந்தே உழைத்து முன்னேறிய ஒருவரை பாராட்டுவதா அல்லது தூற்றுவதா? முன்னேறத் துடிப்பவர்களுக்கு முன்னுதாரணம் அல்லவா வசந்த.
ஊடகவியலாளர் எம்.ஐ. முபாறக்







