Our Feeds


Wednesday, September 24, 2025

Zameera

தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை


 ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பதவியைப் பொறுப்பேற்று ஒரு வருடம் நிறைவடைந்துள்ள நிலையிலும் தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குக் கூட எவ்வித தீர்வும் வழங்கப்படவில்லை. தமிழ் மக்களை அநுரகுமார அரசு நம்ப வைத்து ஏமாற்றியுள்ளது.


தமிழ் மக்களின் நிலைமை முன்பிருந்ததைவிட தற்போது மோசமாகியுள்ளதென இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் நேற்று (24) இடம்பெற்ற தேசியக் கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.


இதுதொடர்பில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,


‘‘அநுரகுமார ஜனாதிபதியாக நாட்டைப் பொறுப்பேற்று ஒருவருடத்தை பூர்த்தி செய்துள்ளார். நாட்டில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்த ஒருவருட காலத்தில் எந்தவொரு தீர்வினையும் பெற்றுக்கொடுக்கவில்லை. தமிழ் மக்கள் திருப்தியடையக் கூடிய ஒரு தீர்வைக் கூட அரசாங்கம் முன்வைக்கவில்லை.


ஜனாதிபதியின் பதவிக் காலத்தில் ஒருவருடம் நிறைவடையும்போது ஒரு வருடத்தில் என்ன செய்தீர்கள் என்று எவரும் கேள்வி கேட்கக்கூடாது என்பதற்காகவே இம்மாதம் முதல் வாரத்தில் வடக்கு மற்றும் ஏனைய மாகாணங்களில் அவசர அவசரமாக அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. அவமானப்படக் கூடாது என்பதற்காகவே அவசரமாக ஒருசில அபிவிருத்திகள் ஆரம்பிக்கப்பட்டன.


தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்சினைக்கு நிலையான தீர்வு வழங்குவதற்கு அரசாங்கம் ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை கூட மேற்கொள்ளவில்லை. காணி விடுவிப்பு பிரச்சினைக்குத் தீர்வு வழங்குவதாக அரசாங்கம் குறிப்பிட்டது. ஆனால் இதுவரையில் அந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை.


வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணி மற்றும் மேய்ச்சல் தரைப் பிரச்சினைக்கும் தீர்வு வழங்கப்படவில்லை. மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவணை மேய்ச்சல் தரைப் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதற்கு இந்த அரசாங்கம் எவ்வித கலந்துரையாடலையும் மேற்கொள்ளவில்லை. அத்துமீறிய மேய்ச்சல்காரர்கள் எமது மக்களின் நிலங்களை ஆக்கிரமித்துள்ளார்கள். இந்தப் பிரச்சினைக்கு வர்த்தமானி அறிவித்தல் ஊடாக தீர்வு காணுமாறு தொடர்ந்து கோரிக்கை விடுக்கிறோம்.


இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் உள்ள காணிகளை விடுவிப்பதாக வாயால் உறுதி வழங்கப்படுகின்றது. ஆனால் செயலில் ஒன்றுமில்லை. வனவளத்துறை திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதாக சுற்றாடல்துறை அமைச்சர் வடக்குக்கு வந்து குறிப்பிட்டார். மூன்று மாதங்கள் கடந்தும் எதுவும் நடக்கவில்லை.


எமது மக்கள் கடந்த காலங்களில் மனித உரிமை மீறல் கொடுமைகளுக்கு உள்ளானார்கள். இதற்கு இந்த அரசாங்கம் வழங்கிய பதிலை எம்மால் ஏற்க முடியாது. யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ள மைதானக் காணியில் இருந்து ஆயுதங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. செம்மணி விவகாரத்தில் எவ்வித நடவடிக்கையும் இல்லை.


மாகாண சபைத் தேர்தலை இந்தாண்டு நடத்துவதாக ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் உறுதியளித்தார்கள். தற்போது 2026 என்று குறிப்பிடுகிறார்கள். மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்குரிய சட்டமூலத்தை விரைவாக நிறைவேற்ற எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.


நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை நீக்கம், புதிய அரசியலமைப்பு உருவாக்கம் பற்றி எவ்வித பேச்சுவார்த்தையும் முன்னெடுக்கப்படவில்லை. எமது மக்கள் கடந்த காலங்களை விடவும் தற்போது பாதிக்கப்பட்டுள்ளார்கள். தமிழ் மக்களின் நிலைமை முன்பிருந்ததைவிட மோசமாகிச் செல்கின்றது. கடந்த கால ஆட்சியாளர்கள் வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முடியாது என்று வெளிப்படையாக குறிப்பிட்டார்கள். ஆனால் அநுரகுமார அரசு நம்ப வைத்து ஏமாற்றியுள்ளது’’ என்றார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »