தற்போதைய அரசாங்கம் போதைப்பொருள் அரசாங்கமாக மாறி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
இந்த நாட்டில் அரட்டை அடித்த அரசாங்கங்களுக்குள் அதிகபடியான பொய்களைக் கூறி மக்களை ஏமாற்றிய அரசாங்கமாக தற்போதைய அரசாங்கம் மாறியுள்ளதாக நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
இன்றைய நாடாளுமன்ற விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தற்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் போதைப்பொருள் அரசாங்கமாக மாறி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கம் தங்களது தவறை மறைப்பதற்கு வேறு ஒருவரைக் குற்றம் சுமத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போது எழுந்துள்ள போதைப்பொருள் பிரச்சினையுடன் தொடர்புடையவர்களைக் கைது செய்து அதன் பின்னணியில் உள்ளவர்களை நாட்டுக்கு வெளிப்படுத்துமாறு அவர் தெரிவித்தார்.
இன்று நீங்கள் எங்கள் மீது விரல் நீட்டும் போது உங்கள் மீது நான்கு விரல்கள் திரும்பியிருப்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் எனவும் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
தெஹ்ரானில் இருந்து வந்த இரண்டு கொள்கலன்கள் துறைமுகத்தில் இருப்பதாகவும், அதில் போதைப்பொருள் இருப்பதாக தங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளதாக சர்வதேச புலனாய்வு தகவல் பிரிவு தகவல் வழங்கியிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இருப்பினும் அரசாங்கம் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவை அனுப்பி சோதனை செய்கிறது. ஆனால் அவ்வாறு சோதனை செய்து அனுப்பிய கொள்கலன் இரண்டிலும் போதைப்பொருள் இருப்பதாக நான் கூறவில்லை சுங்கப்பிரிவின் தலைமையதிகாரி கூறுகிறார்.
அப்படியானால் சோதனை செய்யாமல் வெளியிடப்பட்ட கொள்கலன்களில் என்ன இருக்கின்றது? எனக் கேள்வி எழுப்பிய அவர் அந்த கொள்கலன்கள் பற்றி பேசிய அர்ச்சுனாவை மட்டும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்ததாகவும் குறிப்பிட்டார்.
சோதனை செய்து பின்னர் போதைப்பொருள் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்ட கொள்கலன்கள் தொடர்பில் நீங்கள் எடுத்த நடவடிக்கை என்ன? எனவும் நாமல் ராஜபக்ஷ கேள்வி எழுப்பினர்.
தற்போதைய அரசாங்கத்தினர் தங்களது அரசாங்கத்தை வைத்துக் கொண்டு துறைமுகங்களில் இருந்து வெளியான கொள்கலன்கள் தொடர்பில் தம் மீது குற்றம் சுமத்தி வருவதாகத் தெரிவித்த நாமல் ராஜபக்ஷ , புலனாய்வு தகவல் கிடைக்கப்பெற்ற போதிலும் ஏன் அந்த கொள்கலன்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார்.
