கரூரில் த.வெ.க தலைவர் விஜய்யின் கட்சிக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கட்சியின் அங்கீகாரத்தை இரத்து செய்வதோடு, இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 1 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என நீதிமன்றத்துக்கு மதுரை மானகிரியைச் சேர்ந்த சட்டத்தரணியொருவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
மேலும் சிவகங்கை மாவட்டம் ஆளவந்தான்பட்டியைச் சேர்ந்த சட்டத்தரணியொருவரும் கரூர் துயர சம்பவத்துக்கு காரணமாக நடிகர் விஜய் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து எந்தவித பாரபட்சமுமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த கோரிக்கைகளை முன்வைத்து இன்று (29) மனுதாரர்கள் சார்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இணையவழியினூடாகவும் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த மனுக்கள் இன்று பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
