ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் வெற்றிபெற்ற இந்திய அணி, கிண்ணத்தைப் பெற்றுக்கொள்ள மறுத்துள்ளது.
இந்திய அணி கிண்ணத்தைப் பெற்றுக்கொள்ளாததால் ஆசியக்கிண்ண நிர்வாகம் கிண்ணத்தை எடுத்துச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே, இந்திய அணி கிண்ணமின்றி வெற்றியைக் கொண்டாடியது.
இறுதிப் போட்டியில் வெற்றி அணிக்கு கிண்ணத்தை வழங்குவதற்கு ஆசிய கிரிக்கெட் சபையின் தலைவர் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் மொக்சின் நஹ்பியுடன் பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தார்.
இந்தநிலையிலேயே இந்திய அணி அவர்களிடம் இருந்து கிண்ணத்தை பெற்றுக்கொள்ள மறுத்ததாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் செயலாளர் தேவஜித் சைகியா தெரிவித்துள்ளார்.
எனினும், வெற்றிக்கிண்ணமும் பதக்கங்களும் விரைவில் இந்தியாவுக்கு மீள வழங்கப்படும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் இறுதிப் போட்டியின் பரிசளிப்பு நிகழ்வும் ஒரு மணித்தியாலத்திற்குப் பின்னரே நடைபெற்றது.
ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நேற்று டுபாயில் நடைபெற்றது.
இதில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலபரீட்சை நடத்தின. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.
இதற்கமைய, முதலில் துடுபபெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில், சகல விக்கெட்டுகளையும் இழந்து 146 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது. பாகிஸ்தான் அணி சார்பில் Sahibzada Farhan 57 ஓட்டங்களையும், Fakhar Zaman 46 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர்.
தொடர்ந்து, 147 ஓட்டங்களை என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலளித்தாடிய இந்திய அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை கடந்தது.
அணி சார்பில் திலக் வர்மா 69 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார்.
இந்தநிலையில், இந்திய அணியின் Tilak Varma போட்டியின் ஆட்டநாயகனாகவும், Abhishek Sharma தொடரின் நாயகனாகவும் தெரிவுசெய்யப்பட்டனர்.
