Our Feeds


Sunday, September 28, 2025

SHAHNI RAMEES

உங்களில் எத்தனை பேருக்கு இது தெரியும்?

 

ஐக்கிய தேசிய கட்சியுடன் அனைத்து கட்சிகளும் இணைந்தால் வேறு எந்தவொரு அரசியல் சக்தியாலும் அதற்கு ஈடு கொடுக்க முடியாது. ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐ.தே.க.வுக்கு இடையிலான பிளவினால் சுமார் 15 இலட்சம் வாக்காளர்கள் வாக்களிக்காமலிருக்கின்றனர். அவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்பட்டால் இலகுவாக எமது வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.

அநுராதபுரத்தில் நேற்று ஞாயிறுக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,


ஐக்கிய மக்கள் சக்தியுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. ஏனைய கட்சிகளும் எம்முடன் இணைந்து செயற்பட இணக்கம் தெரிவித்துள்ளன. ஐக்கிய தேசிய கட்சியின் முகாமுக்குள் அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைக்க முடியுமானால் அங்கிருந்து வெற்றிக்கான பயணத்தை ஆரம்பிக்க முடியும். ஐக்கிய தேசிய கட்சிக்கு மாத்திரம் சுமார் 40 இலட்சம் வாக்குகள் உள்ளன.

எனவே இந்த 40 இலட்சம் வாக்காளர்களையும் ஓரிடத்தில் ஒன்று சேர்க்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். அதற்கான முயற்சிகளில் நானும் தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றேன். எனவே சகல ஐ.தே.க. ஆதரவாளர்களும் அதில் பங்கேற்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றோம். தலைமைத்துவம் என்பது இங்கு பிரச்சினையல்ல. எனவே இரு கட்சிகளினதும் தலைவர்கள் அந்தப் பதவிகளை வகிக்க முடியும்.


உதாரணமாக மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டால் இவ்விரு கட்சிகளின் சார்பாகவும் பொது முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்க நான் தயாராக இருக்கின்றேன். எனவே இணைந்து செயற்படுவற்கான பல வழிகள் உள்ளன. இதனை நேர்மறையாக மாத்திரமே சிந்திக்க வேண்டும். மாறாக ஒரு சிறு விடயத்தைக் கூட எதிர்மறையான கோணத்தில் பார்க்கக் கூடாது. ஒருமித்த அழைப்பு விடுக்கப்படும் போது ஐ.தே.க. ஆதரவாளர்கள் அதனை ஏற்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.

மாகாணசபைத் தேர்தலில் சகல மாகாணங்களுக்கும் இரு கட்சிகளின் சார்பிலும் ஒரே வேட்பாளர் பட்டியலை தயாரிக்க முடியுமெனில் அது நிச்சயம் எமது வெற்றிக்கு வழி வகுக்கும். ஐக்கிய மக்கள் சக்தி என்பது ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து சென்ற குழுவினரையே கொண்டுள்ளது. அவ்வாறிருக்கையில் ஏன் எம்மால் இணைந்து பயணிக்க முடியாது? எமது சம்மேளனத்தில் பங்கேற்ற அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து பயணிப்பதே எமது இலக்காகும்.

இவ்வாறு ஐ.தே.க.வுடன் அனைத்து கட்சிகளும் இணைந்தால் வேறு எந்தவொரு அரசியல் சக்தியாலும் அதற்கு ஈடு கொடுக்க முடியாது. இரு கட்சிகளுக்கிடையிலான பிளவினால் சுமார் 15 இலட்சம் வாக்காளர்கள் வாக்களிக்காமலிருக்கின்றனர். அவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்பட்டால் இலகுவாக எமது வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என்றார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »