மக்களிடம் வறுமைப் பாடல் பாடிக் கொண்டிருந்தவர்கள் தற்போது தனவந்தர்களாகியுள்ளனர். எந்தவொரு தொழிலும் இன்றி முழு நேர அரசியலில் ஈடுபட்ட மக்கள் விடுதலை முன்னணியினருக்கு இந்நாடு 76 ஆண்டு காலம் சாபத்தை அனுபவித்ததாகக் கூறுவதற்கு எவ்வித தார்மீக உரிமையும் கிடையாது என முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தமது அரசாங்கம் ஆட்சியமைத்ததன் காரணமாகவே அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக சில அமைச்சர்கள் தெரிவிக்கின்றனர். 2023ஆம் ஆண்டு எமது அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட சட்டத்தின் ஊடாகவே இந்த விபரங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன என்பதை அரசாங்கத்துக்கு நினைவுபடுத்துகின்றேன். ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தில் நாம் அங்கத்துவம் வகித்த அமைச்சரவையில் நீண்ட கலந்தாலோசனையின் பின்னர் இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
அதன் பின்னர் நாமும் எமது சொத்து விபரங்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கின்றோம். தற்போது அவை இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படுகின்றன.
அவை இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் இணையதளத்தில் அந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. எனவே இது இந்த அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை எனக் கூறினால் அது முற்றுமுழுதாக உண்மைக்கு புறம்பானதாகும்.
இது இவ்வாறிருக்க தற்போது அமைச்சர்களின் சொத்து விபரங்கள் பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றன. வாழ்நாள் முழுவதும் அரசியலில் ஈடுபட்டு வேறு எந்த தொழிலும் செய்திருக்காத அமைச்சர் வசந்த சமரசிங்க போன்றோரின் சொத்து மதிப்பு பல கோடிகளாகும். 76 ஆண்டுகள் சாபகாலம் எனக் கூறியவர்கள் அந்தக் காலப்பகுதியில் அரசியல் ஊடாக மாத்திரம் இவ்வாறு கோடிக்கணக்கான சொத்துக்களை சேமித்திருக்கின்றனர்.
மக்களிடம் வறுமைப் பாடல் பாடிக் கொண்டிருந்தவர்கள் தற்போது தனவந்தர்களாகியுள்ளமை எமக்கும் மகிழ்ச்சியளிக்கிறது. எனவே இனியும் 76 ஆண்டுகளாக நாடு சீரழிக்கப்பட்டதாகக் கூற வேண்டாம் என்றார்.
