நாட்டின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு 159 பேருடன் பெரும்பான்மை பலம் கொண்ட அரசாங்கம் இருந்தும், மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.
அனுராதபுரம் கலாவெவ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், மக்கள் தற்போது தமது குறைபாடுகளை அதிகாரம் இல்லாத எதிர்க்கட்சித் தலைவரிடமே முன்வைக்கின்றனர் என தெரிவித்தார்.
இலட்சக்கணக்கான வாக்குகளுடன் அதிகாரத்தை வழங்கிய போதும், அரசாங்கம் மக்களுக்கு எதிர்பார்த்த பதிலையோ, தீர்வையோ வழங்கவில்லை.
கலாவெவ போன்ற விவசாயப் பகுதிகளில் உள்ள மக்களுக்குத் தேவையான உயர்தர விதைகள், உரங்கள், பூச்சி நாசினிகள் கிடைப்பதில்லை. வாக்குறுதியளிக்கப்பட்ட நெல்லுக்கான உத்தரவாத விலையான ரூ. 150ம் கிடைக்கவில்லை.
யானை-மனித மோதல் போன்ற பிரச்சினைகள் “ஒரே கையெழுத்தில்” தீர்க்கப்படும் எனக் கூறப்பட்ட போதிலும், இதுவரை எதுவும் நடக்கவில்லை.
விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்துப் நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பினால், ஆளும் தரப்பினர் வாயை அடைக்க முயற்சிப்பதாகவும் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டினார்.
எவ்வாறாயினும், மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண எதிர்க்கட்சி அனைத்து வழிகளிலும் தலையிடும் என்றும் அவர் உறுதியளித்தார்.
