Our Feeds


Monday, October 27, 2025

SHAHNI RAMEES

பயமில்லை என்றால் 2026 முதற் காலாண்டுக்குள் மாகாணசபைத் தேர்தலை நடத்திக் காட்டுங்கள்!

 


கூட்டுறவு சங்கத் தேர்தலில் அரசாங்கம் படுதோல்வியடைந்துள்ளது.

இதனால் ஏற்பட்டுள்ள அச்சத்தால் மாகாணசபைத் தேர்தலையும் நடத்தாமலிருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அவ்வாறு அரசாங்கத்துக்கு அச்சமில்லை என்றால் 2026 முதற் காலாண்டுக்குள் மாகாணசபைத் தேர்தலை நடத்திக் காண்பிக்குமாறு சவால் விடுப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார். 


கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில்  ஞாயிற்றுக்கிழமை (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், 



வெலிகம பிரதேசசபைத் தலைவர் கொல்லப்பட்டமை தொடர்பில் எவ்வித விசாரணைகளையும் முன்னெடுக்காமல் அவர் பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடையவர் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் விமர்சித்திருக்கின்றார். அதனை முற்றுமுழுதாக அரசாங்கத்தின் நிலைப்பாடாகவே நாம் பார்க்கின்றோம்.


உண்மையில் அவருக்கு பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்பில்லை என்றால், இதுவரைக் காலமும் ஏன் அவர் கைது செய்யப்படவில்லை? பாதாள உலகக் குழுக்களுக்கிடையில் துப்பாக்கிச்சூடுகளை நடத்தி மோதிக் கொள்வதில் தமக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை என்றவாறு தான் அரசாங்கம் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. 


ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்க்கட்சியிலிருந்த போது, எந்தவொரு பிரஜை கொல்லப்பட்டாலும் அவரது பின்னணி குறித்து ஆராய்வது தவறு என்றும், யாருக்கும் யாரையும் கொல்வதற்கு உரிமை இல்லை என்றும் தெரிவித்திருந்தார். ஆனால் இன்று அவரது அரசாங்கத்தில் அங்கத்துவம் வகிக்கும் அமைச்சர் வெலிகம பிரதேசசபைத் தலைவர் கொல்லப்பட்டமையை நியாயப்படுத்த முயற்சிக்கின்றார். அரசாங்கத்தின் பாரிய அழுத்தங்களுக்கு மத்தியிலேயே லசந்த விக்கிரமசேகர வெலிகம பிரதேசசபைத் தலைவராக பதவியேற்றார். அந்த வகையில் தற்போது அவர் கொல்லப்பட்டிருப்பது எமக்கு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது?



1988, 1989களில் மனிதப் படுகொலைகளுடன் தொடர்புடையவர் இன்று பாராளுமன்றத்தில் ஆளுந்தரப்பில் முதல் வரிசையில் அமர்ந்திருக்கின்றனர். ஆனால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவர்கள் கொல்லப்பட வேண்டும் என்று நாம் கூறவில்லை. 2022 கலவரத்தின் போது பாராளுமன்றத்தையும் தீக்கிரையாக்க வேண்டும் என்று கூறியவர்களும் அவர்களில் உள்ளடங்குகின்றனர்.


இவர்களுக்கெதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதையே நாம் வலியுறுத்துகின்றோம். மாறாக அவர்கள் கொல்லப்பட வேண்டும் என்று நாம் ஒருபோதும் எண்ணவில்லை. அரசாங்கத்தின் தன்னிச்சையான போக்கின் காரணமாகவே இன்று தேசிய பாதுகாப்பு பாரதூரமான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.


தற்போது கிடைக்கப் பெற்றுள்ள தகவல்களின் அடிப்படையில் இவர்கள் மாகாணசபைத் தேர்தலையும் நடத்தப் போவதில்லை. கூட்டுறவு தேர்தல்களில் தோல்விகளை எதிர்கொண்டமையை அரசாங்கம் பெரிதாகக் கவனத்தில் கொள்ளவில்லை. ஆனால் இப்போது தான் அதன் பிரதிபலனின் தீவிரத்தன்மையை அரசாங்கம் உணர்ந்து கொண்டுள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டே மாகாணசபைத் தேர்தலை நடத்தாமலிருப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.


ஆட்சியைக் கைப்பற்ற முன்னர் 6 மாதங்கள் மாத்திரம் அதிகாரத்தை தாருங்கள் என மக்களிடம் கோரினர். ஆனால் அதனை விட அதிக கால அவகாசத்தை மக்கள் வழங்கியிருக்கின்றனர். எனவே முடிந்தால் 2026 முதற் காலாண்டில் மாகாணசபைத் தேர்தலை நடத்திக் காண்பிக்குமாறு அரசாங்கத்துக்கு சவால் விடுக்கின்றோம்.


வடக்கு மக்களைப் போன்றே தெற்கு மக்களுக்கும் தமது நிர்வாகப் பொறிமுறை பரவலாக்கப்பட வேண்டும். நாட்டிலுள்ள சுமார் 10 000 பாடசாலைகளில் சுமார் 300 பாடசாலைகள் மாத்திரமே தேசிய பாடசாலைகளாகும். எஞ்சிய 9000 பாடசாலைகளும் மாகாணசபைகளின் கீழ் இயங்குபவையாகும். இதேபோன்று பல வைத்தியசாலைகள் மாகாணசபைகளின் கீழ் இயங்குபவையாககும்.



ஜனாதிபதியின் பிரதிநிதிகளான ஆளுநர்கள் தனிநபராக இவற்றை ஆட்சி செய்வது முற்றுமுழுதாக மாகாணசபைகளுக்கான அதிகாரத்தை பலவீனப்படுத்துவதாகும். எனவே இவை மக்களுக்கு பொறுப்பு கூறக் கூடிய மக்கள் பிரதிநிதிகளாலேயே ஆட்சி செய்யப்பட வேண்டும். உள்ளுராட்சிமன்றத் தேர்தல் காலம் தாழ்த்தப்பட்டதால் ஏற்பட்ட சிக்கல்களை அனைவரும் அறிவர். எனவே மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்காக இனியும் மாகாணசபைத் தேர்தல் காலம் தாழ்த்தப்படக் கூடாது என்றார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »