Our Feeds


Sunday, October 5, 2025

Sri Lanka

4500ஐ கடந்த இலஞ்ச முறைப்பாடுகள் - 58 பேர் கைது!



இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதி வரையில் இலஞ்சம் பெற்ற சம்பவங்கள் தொடர்பாக 4,500க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதி வரை 4,626 முறைப்பாடுகள் தங்கள் ஆணைக்குழுவிற்கு கிடைத்ததாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 

அந்தக் காலகட்டத்தில், 85 சுற்றிவளைப்புகள் நடத்தப்பட்டு 58 பேர் கைது செய்யப்பட்டதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பொலிஸ் அதிகாரிகள் என்பதுடன், அவர்களின் எண்ணிக்கை 19 பேர் ஆகும். 

கைது செய்யப்பட்டவர்களில், 08 பொலிஸ் சார்ஜென்ட்கள், 05 பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மற்றும் மூன்று உப பொலிஸ் பரிசோதர்களும் அடங்குவதாக கூறப்படுகிறது. 

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதி வரையில் இலஞ்சம் பெற்ற சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் நீதி அமைச்சு மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களைச் சேர்ந்த 09 பேர், மூன்று கிராம சேவகர்கள், இரண்டு பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் இரண்டு அதிகாரிகளும் அடங்குவதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

இந்த காலப்பகுதியில் சுற்றிவளைப்புகளின் போது கைது செய்யப்பட்டவர்களைத் தவிர, விசாரணைகள் தொடர்பாக மேலும் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்களில் அரசியல்வாதிகள், அரசு நிறுவனங்களின் பிரதானிகள் மற்றும் வைத்தியர்கள் உள்ளிட்டவர்களும் அடங்குவதாக ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது. 

இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஓகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி வரை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, நீதிமன்றங்களில் 61 வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளது. 

இலஞ்சம் வாங்கியதற்காக 36 வழக்குகளும், ஊழல் குற்றத்திற்காக 15 வழக்குகளும், முறைக்கேடாக சொத்துக்கள் ஈட்டியமைக்காக 10 வழக்குகளும் 75 நபர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

இந்த காலப்பகுதியில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட 44 வழக்குகளை நிறைவு செய்துள்ளதுடன், அவற்றில் 29 நபர்கள் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் நீதிமன்றங்களில் மேலும் 276 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »