Our Feeds


Wednesday, October 29, 2025

Sri Lanka

ரனிலினால் மாத்திரமே முடியும் என்றதை உடைத்து சாதித்தது AKD அரசு | வேகமாக வளர்ச்சியடைந்த இலங்கை பொருளாதாரம்.



இலங்கையின் பொருளாதாரம் 2026ம் ஆண்டளவில் 3.1% என்ற அதன் இயல்பான வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பும் என சர்வதேச நாணய நிதியம் எதிர்வு கூறியுள்ளது.


சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் திணைக்களத்தின் துணை பணிப்பாளர் தோமஸ் ஹெல்ப்லிங் அறிக்கையொன்றில் இதனை குறிப்பிட்டுள்ளார்.


2022ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு இலங்கை சந்தித்த கடுமையான பொருளாதாரப் பிரச்சினையிலிருந்து மிக வேகமாக இலங்கை மீண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


சர்வதேச நாணய நிதியம் வழங்கிய நீடிக்கப்பட்ட நிதி வசதி மற்றும் நாட்டின் சில மறுசீரமைப்பு காரணமாக, கடந்த ஆண்டு பொருளாதாரம் 5% வரையிலும், இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 4.8% வரையிலும் வேகமாக வளர்ச்சி அடைந்தது.


இது ஒரு நல்ல மீட்சியாக பார்க்கப்படுகிறது.


எனினும், தற்போது அந்த வேகமான மீட்சி முடிவடைந்து, நாட்டின் பொருளாதாரம் இனி ஆண்டுக்குச் சராசரியாக 3.1% என்ற அளவில் சாதாரண வேகத்தில் வளர்ச்சியடையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


அதேநேரம், சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் இந்த மாத தொடக்கத்தில் இலங்கைக்கு விஜயம் செய்து மேற்கொண்ட ஆய்வில் அரசாங்கம் செய்துள்ள பொருளாதார மறுசீரமைப்பு திருப்திகரமாக இருப்பதாகக் கூறி, அடுத்த கட்ட நிதியுதவிக்கான ஒப்புதலை அளித்துள்ளனர்.


குறிப்பாக, மின்சாரத்தை விற்பனை செய்யும் நிறுவனங்கள் நஷ்டம் அடையாமல் இருக்க, மின்சாரத்தின் விலையைச் செலவுக்கு ஏற்றவாறு நிர்ணயிப்பது போன்ற மறுசீரமைபபு சரியாகப் பின்பற்றப்படுகின்றன என்றும் சர்வதேச நாணய நிதியம் பாராட்டியது.


எதுஎவ்வாறாயினும், பொருளாதாரத்தை முழுமையாகச் சரிசெய்ய, இலங்கை அரசாங்கம் இந்தப் புதிய திட்டங்களை விடாமல் தொடர்ந்து செயற்படுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


அதேநேரம், 2028ஆம் ஆண்டுக்கான வருவாய் குறித்த திட்டங்களை இப்போதே விவாதிக்க சர்வதேச நாணய நிதியம் விரும்பவில்லை என்றும் மறுசீரமைப்புகள் தொடர்ந்து வெற்றிகரமாக நடந்தால், நீண்ட கால கவலைகள் தாமாகவே சரியாகும் என நம்புவதாக தோமஸ் ஹெல்ப்லிங் குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »