லசந்த விக்ரமசேகரவின் கொலை தொடர்பில் பாக்கசார்பற்ற விசாரணைகளை முன்னெடுத்து, அவரது குடும்பத்தினருக்கு உரிய நீதியை நிலை நாட்ட வேண்டும். மக்கள் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியொருவரை இவ்வாறு படுகொலை செய்துள்ளமையானது நாட்டில் கொலை கலாசாரம் எந்தளவுக்கு வேறூன்றியுள்ளது என்பதை தெளிவாகக் காண்பிக்கிறது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
வெலிகம பிரதேச சபையில் பொது மக்கள் தினத்தன்று இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளால் படுகொலை செய்யப்பட்ட வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் பூதவுடலுக்கு ஞாயிற்றுக்கிழமை (26) எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இறுதியஞ்சலி செலுத்தினார்.
அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
லசந்த விக்ரமசேகரவின் கொலை தொடர்பில் பாக்கசார்பற்ற விசாரணைகளை முனடுத்து, அவரது குடும்பத்தினருக்கு உரிய நீதியை நிலை நாட்ட வேண்டும். லசந்த விக்ரமசேகரவின் கொலைச் சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
கொலை கலாச்சாரம் சமூகத்தில் தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது. மக்கள் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட, சபைக்கு தெரிவான ஏனைய உறுப்பினர்களால் தலைவராக தெரிவு செய்யப்பட்ட ஒருவரை இவ்வாறு படுகொலை செய்வதாவது நாட்டில் கொலை கலாசாரம் எந்தளவுக்கு வேறூன்றியுள்ளது என்பதை தெளிவாகக் காண்பிக்கிறது.
இன்று நாட்டில் சட்டம் ஒழுங்கு இல்லை. காட்டுச் சட்டமே நடைமுறையிலுள்ளது. இதன் காரணமாக, மக்களின் வாழ்க்கை சீரழிந்துபோயுள்ளது. இந்த கொலை கலாச்சாரத்தை நாம் இல்லாதொழிக்க வேண்டும். தற்போதைய அரசாங்கத்தின் பலவீனத்தால், சமூகம் பல்வேறு பிரிவினரின் பிடியில் சிக்கியுள்ளது. இது மக்களின் வாழும் உரிமை மீது மேற்கொள்ளப்பட்டுள்ள பாரதூரமான தாக்குதலாகும்.
மக்களின் வாழும் உரிமையை நாம் பாதுகாக்க வேண்டும். எனவே இந்தக் கொலைகாரர்களுக்கு தண்டனையைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். அவரது கொலை குறித்து பக்கசார்பற்ற விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும். தனக்கு உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதாக குறிப்பிட்டு எழுத்து மூலம் பொலிஸ்மா அதிபரிடம் அவர் பாதுகாப்பு கோரிய போதிலும், உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை. இவ்வாறு பாதுகாப்பு வழங்காமை குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்றார்.
