ரஷ்யாவிடம் இருந்து இந்தியா மசகு எண்ணெய்
இறக்குமதி செய்வதைக் கிட்டத்தட்ட நிறுத்திவிட்டது என அமெரிக்க ஜனதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார். இருப்பினும், இது குறித்த அதிகாரபூர்வமான தகவல் எதுவும் இந்திய அரசிடமிருந்து வரவில்லை.அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், உக்ரைன் ஜனாதிபதி *ஜெலன்ஸ்கியுடன் வொஷிங்டன் வெள்ளை மாளிகையில் சந்திப்பு நடத்திய பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், " ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்காது. அவர்கள் (இந்தியா) ஏற்கனவே பின்வாங்கத் தொடங்கிவிட்டனர். கிட்டத்தட்ட ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிட்டது" என்று தெரிவித்தார்.
உக்ரைனின் பாதுகாப்பு, எரிசக்தி தேவைகள் மற்றும் ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளை அதிகரிப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இந்தச் சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பிறகு, ஐரோப்பிய நாடுகள் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை ரத்து செய்தன. இதனையடுத்து, ரஷ்யா இந்தியாவுக்கு மலிவு விலையில் மசகு எண்ணெய் வழங்கத் தொடங்கியது.
இதன் விளைவாக, 2018 முதல் 2020 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த எண்ணெய் இறக்குமதியில் வெறும் 1.7% ஆக இருந்த ரஷ்யாவின் பங்கு, 2023-24 நிதியாண்டில் 40% ஆக உயர்ந்தது. இதன் மூலம் ரஷ்யா, இந்தியாவுக்கு மசகு எண்ணெய் வழங்கும் நாடுகளில் முதலிடம் பிடித்தது.
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா அதிக அளவில் எண்ணெய் இறக்குமதி செய்யத் தொடங்கியதிலிருந்து, அமெரிக்கா இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தது. மேலும், டிரம்ப் நிர்வாகம் ரஷ்ய எண்ணெய் இறக்குமதிக்கு இந்தியா மீது 25% கூடுதல் வரியும் விதித்திருந்தது.
கடந்த 15 ஆம் திகதி டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பில், ரஷ்யாவிடம் இருந்து மசகு எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்துவதாகப் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளதாகக் கூறியிருந்தார்.
ஆனால், இந்தத் தகவல் குறித்து இந்திய மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், "பிரதமர் மோடியுடன் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அப்படி ஒரு தொலைபேசி உரையாடல் நடத்தியது எனக்குத் தெரியாது" என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.
புதிய தகவல்களின்படி, ஒக்டோபர் மாதத்தின் முதல் பாதியில் இந்தியா ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை மீண்டும் அதிகரித்து உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது, இது டிரம்ப்பின் சமீபத்திய கூற்றுக்கு முரணாக உள்ளது.
