பொதுச் சமூகத்தின் பாதுகாப்பிற்காகவே அரச பொறிமுறையொன்று உள்ளது ஆனால் பாதாள உலகத்தினரிடம் உள்ள பண பலத்தினால் அரச பொறிமுறை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க குறிப்பிட்டார்.
இனிமேலும் இதனை மறைத்து இந்தப் பிரச்சினைக்கு முகங்கொடுக்க முடியாது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
குறித்த தரப்பினரிடம் ஆயுதங்கள் உள்ளன. அனுமதிப் பத்திரத்துடன் ஆயுதங்களைப் பயன்படுத்தும் அதிகாரம் அரசாங்கத்திற்கே உள்ளது. அரசிடம் இருக்க வேண்டிய ஆயுதங்கள் எவ்வாறு அவர்கள் கைகளுக்குச் சென்றது?
சில இராணுவ முகாங்களில் இருந்து 73 ரீ 56 ரக துப்பாக்கிகள் அவர்களின் கைகளுக்குச் சென்றுள்ளன. அதில் சுமார் 35 துப்பாக்கிகள் மீளப் பெறப்பட்டுள்ளன.அதற்குப் பயன்படுத்தும் ரவைகள் பிடிபட்டுள்ளன.
இராணுவ கேர்னல் ஒருவர் தான் இவற்றை வழங்கியுள்ளார்.
அதற்காக அவரின் வங்கிக் கணக்கிற்குப் பணம் கிடைத்துள்ளது. ஒரு காவல்துறை அதிகாரி தனது ஆயுதத்தை விற்பனை செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
அந்த ஆயுதக் குழுக்களிடமுள்ள பண பலத்தினால் இவை நிகழ்ந்துள்ளன. இது தொடர்பான விசாரணைகளில் காவல்துறை அதிகாரிகளின் தொடர்பு வெளிப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு, பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அதற்காக உருவாக்கப்பட்ட நிறுவனங்களுக்குள் கருப்பு ஆட்சி உருவாக்கப்பட்டுள்ளது.
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் வாகனங்கள் இன்றி வாகன இலக்கத்தகடுகள் வழங்கப்பட்டுள்ளன. மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திலுள்ள சிலர் சட்டவிரோத வாகனங்கள் பாவனைக்கு வர பங்களித்துள்ளனர்.
குடிவரவு குடியகல்வு திணைக்களம் தேசிய பாதுகாப்பிற்காக பங்களிக்கும் நிறுவனம். ஆனால் சில அதிகாரிகள் பாதாள தலைவர்களுக்கு கடவுச்சீட்டு தயாரித்து வழங்கியுள்ளனர்.
இவ்வாறு தான் அரச கட்டமைப்பிற்குள் இந்தப் பேரழிவு நுழைந்துள்ளது. சுங்கத்திணைக்களத்திலுள்ள சிலருக்கும் இந்தக் கும்பலுடன் தொடர்பு உள்ளது.
அதனால் உத்தியோகபூர்வ அரசாங்கம் இருப்பதைப் போன்று அதே அளவு பலமாக இல்லாவிட்டாலும் அவர்களுக்குத் தேவையானவற்றை வழங்கும் அரச பொறிமுறையொன்றைத் தம்பிடியில் வைத்துள்ளனர்.
வெளிப்படையான அரசாங்கத்தைப் போன்றே மறைவான கருப்பு ஆட்சியொன்று உருவாகியுள்ளது.
இந்த நாட்டில் இரண்டு ஆட்சிகள் இருக்க முடியாது. மக்களின் ஜனநாயக ஆணையினால் உருவான ஆட்சி மாத்திரமே இருக்க முடியும். கருப்பு ஆட்சி ஒழிக்கப்படும் என உங்களுக்கு உத்தரவாதம் அளிக்கிறோம் என ஜனாதிபதி வலியுறுத்தினார்.
