ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பாராளுமன்ற உறுப்புரிமையிலிருந்து விலகி மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தயாராகவுள்ளதாகவும் அர்ப்பணிப்புடன் மாகாண சபைத் தேர்தலில் கட்சியை வெற்றியடைய செய்யத் தயாராக இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஆளுங்கட்சி உறுப்பினர்கள் இதற்கு முன்னர் இவ்வாறானதொரு விடயத்தை மேற்கொண்டிருந்தாலும் எதிர்க் கட்சியில் அப்படியொரு விடயம் இடம்பெறுவது அரிதான விடயமென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான கட்சி அலுவலகத்தில் டீ.எஸ்.சேனாநாயக்க அரசியல் கல்வி நிலைபேரான அபிவிருத்தி கல்வி பீடத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (11) சஜித் பிரேமதாச தலைமையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில், ஐக்கிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களுக்கான விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. அதன்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார, தேசிய ஒருங்கிணைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன, சமித்ரானி கிரியெல்ல, புத்திக பத்திரண, ஹிருணிகா பிரேமசந்திர உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
2020ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் பதிவு செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தி இதுவரையில் தொலைபேசி சின்னத்தில் இரு பொதுத் தேர்தல்களிலும் ஒரு ஜனாதிபதித் தேர்தலிலும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டுள்ளது. தற்போது வரையில் ஐக்கிய மக்கள் சக்திக்கு உள்ளூராட்சி சபைகளில் 1,773 உறுப்பினர்கள் இருக்கின்றனர். அவர்களில் 714 பேர் பெண்கள் என்பதுடன் அன்றிலிருந்து வழங்கிய அர்ப்பணிப்புகள், முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோன்று இரண்டாவது இடத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பிலுள்ள உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களே அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள்.
அரசாங்கம் நாட்டு மக்களுக்கு நற்செய்தியொன்றை வழங்குவதற்கு காத்திருக்கிறது. அந்த நற்செய்தி மின் கட்டண அதிகரிப்பாகும். இந்த மின் கட்டண அதிகரிப்பு இடம்பெறக் கூடாது என்று இறைவனை பிரார்த்திக்கிறேன். அரசாங்கம் ஏதாவதொரு விதத்தில் மின் கட்டணத்தை அதிகரித்தால் வீதிக்கு இறங்கி அதற்கெதிராக குரல் கொடுப்போம். மின் கட்டண அதிகரிப்பினூடாக பொது மக்களே அசெளகரியத்துக்குள்ளாகுவார்கள். 220 இலட்சம் மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு முன் வரவேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
