Our Feeds


Friday, October 31, 2025

Zameera

வெளிநாட்டு முதலீடுகளுக்கான ஜனாதிபதி பிரதிநிதியாக ஹனீஃப் யூசுஃப்


 வெளிநாட்டு முதலீடுகளுக்கான ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியாக, மேல் மாகாண ஆளுநர் ஹனீஃப் யூசுஃபை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நியமித்துள்ளார். 


அரசியலமைப்பின் 41 (1) சரத்தின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது. 

உலகளாவிய முதலீட்டுப் பங்களிப்பு தொடர்பில் ஹனீஃப் யூசுஃப் அவர்களுக்கு உள்ள அனுபவம் மற்றும் இலங்கையின் தனியார் துறையின் வளர்ச்சிக்கு அவர் அளித்த நீண்டகாலப் பங்களிப்பைக் கருத்தில் கொண்டு, அரசாங்கத்தின் பொருளாதார மீள் எழுச்சித் திட்டத்திற்கு பங்களிக்கும் அவரது திறனைப் பாராட்டி இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 

அவருக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகள்: 

சர்வதேச முதலீட்டாளர்கள் மற்றும் மூலோபாயப் பங்காளர்களுடன் உயர்மட்ட உரையாடல்களுக்கு வசதி செய்தல். 

முதலீட்டாளர் நம்பிக்கையை வலுப்படுத்துதல் மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை (FDI) நாட்டிற்குள் ஈர்க்கும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு உதவுதல். 

முக்கிய முதலீட்டு வாய்ப்புகளை அடையாளம் கண்டு, அவற்றை வளர்த்து முன்னெடுத்துச் செல்வதற்கு உதவுதல். 

இலங்கை முதலீட்டுச் சபை (BOI), ஏற்றுமதி அபிவிருத்திச் சபை (EDB), துறைமுக நகர ஆணைக்குழு மற்றும் தொடர்புடைய அமைச்சுக்களுடன் நெருக்கமாகச் செயற்படுதல். 

இந்த நியமனம் மூலம், நாட்டில் நிலையான வெளிநாட்டு முதலீடுகளுக்குச் சாதகமான சூழலை உருவாக்குதல், இலங்கையின் தற்போதைய பொருளாதார ஸ்திரத்தன்மை குறித்த சர்வதேச நம்பிக்கையை உறுதிப்படுத்துதல் மற்றும் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துதல் ஆகிய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஹனீஃப் யூசுஃப், மேல் மாகாண ஆளுநர் பதவிக்கு மேலதிகமாக, இந்தப் புதிய பதவியை கௌரவ சேவையாக மேற்கொள்வார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »