Our Feeds


Monday, October 13, 2025

Zameera

சபாநாயகர் பொய் கூறி பாராளுமன்றத்தையே ஏமாற்றியிருக்கின்றார் - உதய கம்மன்பில


 (எம்.மனோசித்ரா)

நாட்டின் மூன்றாவது பிரஜையும் பாராளுமன்றத்தின் பிரதானியுமான சபாநாயகர் பொய் கூறி பாராளுமன்றத்தையே ஏமாற்றியிருக்கின்றார். பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள முடியாது என சட்டமா அதிபர் திணைக்களமும், பாராளுமன்ற செயலாளர் சபையும் பரிந்துரைத்ததாக சபாநாயகர் கூறியது முற்றிலும் பொய்யாகும் என பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பில் திங்கட்கிழமை (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டின் மூன்றாவது பிரஜையும் பாராளுமன்றத்தின் பிரதானியுமான சபாநாயகர் பொய் கூறி பாராளுமன்றத்தையே ஏமாற்றியிருக்கின்றார். பாராளுமன்றத்தின் கௌரவத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பிலுள்ள சபாநாயகரே இவ்வாறு பாராளுமன்ற கௌரவத்தை சீரழிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றார். நம்பிக்கையில்லா பிரேரணையொன்று தொடர்பிலேயே அவர் மீது இந்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றோம்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணை தொடர்பில் எதிர்க்கட்சியினரால் பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர தொடர்பில் நம்பிக்கையில்லா பிரேரணையொன்று சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் அந்த நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதம் இன்றி நிராகரிப்பதற்கு சபாநாயகர் தீர்மானித்தார். பிரதி அமைச்சரொருவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டமை இதுவே முதல் சந்தர்ப்பம் என்பதோடு மாத்திரமின்றி, நம்பிக்கையில்லா பிரேரணையொன்று விவாதம் இன்றி நிராகரிக்கப்பட்டமையும் இதுவே முதலாவது சந்தர்ப்பமாகும்.

பிரதி அமைச்சரொருவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பிப்பதற்கு சட்டத்தில் இடமில்லை என சபாநாயகர் கூறினார். சம்பிரதாயம் இல்லை என்ற போதிலும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் அமிர்தலிங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்பட்டு, பாராளுமன்றத்தில் எந்தவொரு உறுப்பினருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைக்க முடியும் என்று கூறப்பட்டது. அதற்கமைய தனது கருத்து தவறு என்பதை உணர்ந்து கொண்ட சபாநாயகர் அது தொடர்பில் மற்றுமொரு விடயத்தைக் கூறினார்.

பிரதி அமைச்சர்களுக்கு பொறுப்புக்கள் பொறுப்பாக்கப்படவில்லை என்பதால் அவருக்கெதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைக்க முடியாது என பின்னர் கூறினார். எனினும் ஜனாதிபதி நாட்டிலில்லாத போது பிரதி பாதுகாப்பு அமைச்சர் பதில் பாதுகாப்பு அமைச்சராக கடமைகளைப் பொறுப்பேற்பதால் சபாநாயகரின் அந்த தர்க்கத்தையும் எதிர்க்கட்சிகள் ஏற்க மறுத்தன. சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனை மற்றும் பாராளுமன்ற செயலாளர் சபையின் பரிந்துரைக்கமையவே தான் இந்த தீர்மானத்தை எடுத்ததாகவும் சபாநாயகர் குறிப்பிட்டிருந்தார்.

அந்த அறிக்கை எதிர்க்கட்சியினரின் நீண்ட அழுத்தங்களால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய அதில், 'உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து விசாரணைகள் இடம்பெறுவதால் அது குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க முடியுமா?' என சபாநாயகரால் கேட்க்கப்பட்டுள்ளது. அதற்கு சட்டமா அதிபர் 'முடியாது' என பதிலளித்துள்ளார். இதனை பிரதி அமைச்சரின் நம்பிக்கையில்லா பிரேரணை விவகாரத்தில் பயன்படுத்திக் கொண்டுள்ளனர். பாராளுமன்ற செயலாளர் சபையால் வழங்கப்பட்ட அறிக்கையிலும் நம்பிக்கையில்லா பிரேரணை ஏற்றுக் கொள்ள முடியும் என்றே பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆனால் சபாநாயகர் முரணான விடயத்தைக் கூறி பாராளுமன்றத்தை ஏமாற்றியிருக்கின்றார். அதற்கு அவர் நிச்சயம் பதிலளிக்க வேண்டும் என்றார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »