எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல்களில் போட்டியிடுவதற்காக, ஐக்கிய மக்கள் சக்தியின் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக தயாராக இருப்பதாக எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
கட்சியின் வெற்றியை உறுதி செய்வதற்காக தமது பதவிகளைத் தியாகம் செய்ய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாராக உள்ளனர் என்றும் இதன் மூலம், மாகாண சபைத் தேர்தலை கட்சி எந்த அளவுக்கு தீவிரமாக எடுத்துக்கொள்கிறது என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
இதன்போது அரசாங்கத்துக்கு கடும் எச்சரிக்கை விடுத்த சஜித் பிரேமதாச, மின் கட்டணங்கள் மீண்டும் உயர்த்தப்பட்டால், ஐக்கிய மக்கள் சக்தி மக்களோடு இணைந்து வீதியில் இறங்கிப் போராடும் என்றும் தெரிவித்தார்.
மின் கட்டண உயர்வின் மூலம் அரசாங்கம் மக்களுக்கு ஒரு "புத்தாண்டு பரிசை" வழங்கத் தயாராகி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இந்த நடவடிக்கை ஏற்கனவே வாழ்க்கைச் செலவால் சிரமப்படும் தாய்மார்கள் மற்றும் பெண்களின் சுமையை மேலும் அதிகரிக்கும் என்றும், இந்த "கொடுமையான கொள்கைகளை" முறியடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஐக்கிய மக்கள் சக்தி 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் பதிவு செய்யப்பட்டதில் இருந்து மூன்று தேசிய தேர்தல்களில் போட்டியிட்டுள்ளது.
தற்போது 714 பெண்கள் உட்பட 1,773 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள, நாட்டில் உள்ளூராட்சி மன்றங்களில் இரண்டாவது பெரிய பிரதிநிதித்துவத்தைக் கொண்ட கட்சியாக உள்ளது என்றும் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.
