Our Feeds


Wednesday, October 29, 2025

Sri Lanka

யோஷித ராஜபக்ஷ & அவரது பாட்டிக்கு எதிரான வழக்கை விசாரணைக்கு அழைக்கத் திட்டம் - வெளியான உத்தரவு.



பணச் சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ், யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி ஃபொரஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (29) உத்தரவிட்டது. 


இந்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி முன்னிலையில் அழைக்கப்பட்ட போது, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். 


இதன்போது, முறைப்பாட்டாளர் தரப்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும் பிரதிவாதிகளுக்கு கையளிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய இந்த வழக்கை விசாரணைக்கு உட்படுத்துவதற்கான திகதியை நிர்ணயிக்க முடியும் எனவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார். 


அந்த சந்தர்ப்பத்தில், பிரதிவாதி தரப்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ், பிரதிவாதிகளால் கோரப்பட்ட சில ஆவணங்கள் இன்னும் கிடைக்கப்பெற வேண்டியுள்ளதாகவும், அதன் பின்னர் இந்த வழக்கு தொடர்பான ஒப்புதல்களை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் நீதிமன்றத்தில் கூறினார். 


அதன்படி, இந்த வழக்கை மீண்டும் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு உத்தரவிட்ட மேல் நீதிமன்ற நீதிபதி, அன்றைய தினம் இந்த வழக்கு தொடர்பான ஒப்புதல்களை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார். 


2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதிக்கும் 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், சட்டவிரோதமாக ஈட்டிய 59 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பணத்தை, மூன்று தனியார் வங்கிக் கணக்குகளில் நிலையான வைப்புக் கணக்குகளில் வைப்பிலிட்டதன் மூலம், பணச் சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்துள்ளதாக குற்றம் சுமத்தி, சட்டமா அதிபர் இந்த பிரதிவாதிகளுக்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »