Our Feeds


Sunday, October 12, 2025

Sri Lanka

மாகாண சபைத் தேர்தல் ஏப்ரல் மாதத்திற்குள் - முடிவெடுக்க அரசாங்கம் தீவிரம்!


பல ஆண்டுகளாகத் தாமதமாகி வந்த மாகாண சபைத் தேர்தலை அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் நடத்துவதற்கு அரசாங்கம் தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது. நாட்டின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார சூழல்கள், குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் ஆகியவற்றின் பின்னணியில், இந்தத் தேர்தல்களை விரைவாக நடத்தி முடிப்பதற்கான நிர்ப்பந்தம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது.

அத்துடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் முக்கியமான மார்ச் அமர்வுகளுக்கு முன்னதாக, தேர்தல் அறிவிப்புகளை வெளியிடுவது மற்றும் சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்வது போன்ற முக்கிய சர்வதேச இணக்கத் தீர்மானங்களையும் அரசாங்கம் எடுக்கவுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகு பொதுத் தேர்தல், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் மற்றும் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னர் அறிவித்திருந்தாலும், கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் ஏற்பட்ட எதிர்பாராத முடிவுகளைத் தொடர்ந்து, மாகாண சபைத் தேர்தலை ஒத்திவைக்கும் முடிவை அரசாங்கம் எடுத்திருந்தது.

எனினும், நாட்டின் சர்வதேச நற்பெயரைக் கட்டியெழுப்புவதற்கும், சர்வதேச நாணய நிதியத்தின் கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கும், 'சட்டபூர்வமாக நிலுவையில் உள்ள' அனைத்துத் தேர்தல்களையும் நடத்துவது அத்தியாவசியம் என்ற நிலை உருவாகியுள்ளது.

குறிப்பாக, ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளின்படி, பல நெருக்கடியான முடிவுகளை அரசாங்கம் எடுக்க வேண்டியிருக்கும். அத்தகைய முடிவுகளை எடுப்பதற்கு முன்னர், மாகாண சபைகளுடன் கலந்தாலோசனை நடத்துவது கட்டாயமாகும். இதற்கு, செயல்பாட்டில் உள்ள மாகாண சபைகள் தேவைப்படுகின்றன. எனவே, சர்வதேச பொருளாதார அழுத்தங்களும், ஜனநாயகக் கடமைகளும் இணைந்து இந்தத் தேர்தலை விரைவுபடுத்தும் காரணியாக அமைந்துள்ளன.

மாகாண சபைத் தேர்தல் கடைசியாக 2012 ஆம் ஆண்டில் கிழக்கு, வடமத்திய, சப்ரகமுவ, 2013 ஆம் ஆண்டில் மத்திய, வடமேல், வட மாகாணங்கள் மற்றும் 2014 ஆம் ஆண்டில் ஊவா மாகாணம் என நான்கு கட்டங்களாக நடத்தப்பட்டன. அதன் பிறகு, கடந்த பல ஆண்டுகளாக, தேர்தல் முறைமையைக் காரணம்காட்டித் மாகாண சபை தேர்தல்கள் நடத்தப்படாமல் தாமதப்படுத்தப்பட்டு வருகின்றன.

தாமதத்திற்கான அடிப்படைக் காரணம், புதிய கலப்புத் தேர்தல் முறைமையை அறிமுகப்படுத்துவதாகும். இது விகிதாசார மற்றும் வட்டார முறைமைகளை இணைக்கும் ஒரு முறையாகும்.

புதிய முறைமைக்கு ஏற்ற எல்லைகளை மறுசீரமைப்பதற்காக, அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவால் மஹிந்த தேசப்பிரிய தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழு 2017 இல் நியமிக்கப்பட்டது.

இக்குழு 2018 மார்ச் மாதம் தனது அறிக்கையைச் சமர்ப்பித்து, புதிய முறைமைக்கான விரிவான பரிந்துரைகளை வழங்கியது. துரதிர்ஷ்டவசமாக, இக்குழுவின் அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டபோது, புதிய தேர்தல் முறையை அமுல்படுத்துவதற்கான சட்டமூலம் நிறைவேற்றப்படாமல், அறிக்கை நிராகரிக்கப்பட்டது.

இந்தச் சட்டச் சிக்கல் காரணமாகவே மாகாண சபைத் தேர்தல்கள் இன்றுவரை ஸ்தம்பித்துள்ளன. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பழைய முறைமையா? அல்லது  புதிய முறைமையா? என்ற இரண்டு முக்கிய தெரிவுகளில் ஒன்றை நோக்கி நகர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

மறுபுறம் சர்வதேச அரங்கில் இணக்கப்பாட்டை நிரூபிக்கவும், நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்குத் தேவையான நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றவும், மாகாண சபைத் தேர்தல் விரைவில் நடத்தப்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »