Our Feeds


Sunday, October 19, 2025

SHAHNI RAMEES

வெளிவிவகார அமைச்சர் விஜித சவூதிக்கு விஜயம்!

 

உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் எதிர்வரும் 6 ஆம் திகதி வியாழக்கிழமை சவூதி அரேபியாவுக்கு செல்ல உள்ளார். ரியாத் நகரில் நடைபெறவுள்ள நான்காவது அழகியல் மற்றும் மருத்துவ அறிவியல் அகாடமி மாநாடு மற்றும் கண்காட்சியில் கலந்துகொள்வதற்காகவே இந்த விஜயம் முன்னெடுக்கப்படுகின்றது.

அமைச்சர் விஜித ஹேரத், இந்த சர்வதேச மாநாட்டில் பங்கேற்பதுடன், சவூதி அரேபிய அரசாங்கத்தின் முக்கிய தலைவர்களையும், அதிகாரிகளையும் சந்திக்க உள்ளார். இந்தச் சந்திப்புகள் மூலம், இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது, புதிய வர்த்தக மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை ஆராய்வது, அத்துடன் சவூதி அரேபியாவில் பணிபுரியும் 5 இலட்சத்திற்கும் அதிகமான இலங்கை தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாப்பது குறித்தும் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளார்.


இந்து சமுத்திரத்தின் கேந்திர மையத்தில் இலங்கை அமைந்திருப்பதால், கடல்சார் பாதுகாப்பு மற்றும் சர்வதேச வர்த்தகப் பாதைகளுக்கு மிகவும் இன்றியமையாதது. மறுபுறம், சவூதி அரேபியா உலகின் முக்கிய எண்ணெய் உற்பத்தியாளராகவும் மத்திய கிழக்கின் முஸ்லிம் உலகின் தலைமைத்துவ நாடாகவும் விளங்குவதுடன், உலகளவில் பொருளாதார மற்றும் அரசியல் செல்வாக்கு மிக்க நாடாகவும் திகழ்கிறது. இலங்கைக்குத் தேவையான எரிபொருள் விநியோகத்தின் முக்கிய ஆதாரமாகவும், நாட்டின் அந்நியச் செலாவணிக்கு பெரும் பங்களிப்பை வழங்கும் தொழிலாளர்களின் மையமாகவும் சவூதி அரேபியா உள்ளது.

சவூதி அபிவிருத்தி நிதியம் ஊடாக நெடுஞ்சாலைகள், நீர்வழங்கல் மற்றும் மருத்துவமனைத் திட்டங்கள் போன்ற முக்கிய உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதி உதவி கிடைக்கப்பெறுகிறது.  இந்த விஜயம், புதிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ், அரபு நாடுகளுடன் குறிப்பாக சவூதி அரேபியாவுடன் நெருக்கமான உறவுகளைப் பேணும் வெளியுறவுக் கொள்கையின் முக்கியத்துவத்தை காட்டுகிறது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »