ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகிய இரு கட்சிகளும் தத்தமது தனித்துவத்தன்மையை பாதுகாத்துக் கொண்டு, கொள்கை ரீதியாக இணைந்து செயற்படத் தீர்மானித்துள்ளமை மகிழ்ச்சியளிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு கூட்டத்திலும், அதற்கு முன்னர் முகாமைத்துவக் குழு கூட்டங்கள் இரண்டிலும் ஏகமனதான தீர்மானமொன்று எட்டப்பட்டது. அதற்கமைய ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைத்துவம் மற்றும் நெறிப்படுத்தலின் கீழ் ஐக்கிய மக்கள் சக்தியுடன் பொது வேலைத்திட்டத்துக்கு அரசியல் ரீதியில் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது,
அதற்காக ஏகமதான அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது. நாட்டையும் மக்களையும் பாதித்துள்ள பிரச்சினைகள் மற்றும் ஏனைய காரணிகளுக்கு தீர்வினையும் பதிலையும் வழங்குவதற்காக கொள்கை ரீதியான முற்போக்கான இணக்கப்பாட்டுக்கமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைத்துவத்தில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து இந்த ஒருமித்த பயணத்தை தொடரவுள்ளோம். இரு கட்சிகளும் அவற்றின் தனித்துவத்தன்மையை வெவ்வேறாக பாதுகாத்துக் கொண்டு இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தயாராகவுள்ளோம். அதற்கான முழுமையான அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது என்றார்.
