மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் சட்டமா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளோரின் பெயர் விவரங்களை வெளியிட்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய, இலங்கை மத்திய வங்கி நிதி விடயத்தில் 7,81,09,05,060 ரூபா மற்றும் ஊழியர் சேமலாப நிதி விடயத்தில் 6,98,92,77,94,363 ரூபா என்ற வகையில் பேர்பச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்ட நஷ்டத்தை அறவிடுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் நேற்று (26) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே பெயர் விபரங்களை வெளியிட்டார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளின் பிரகாரம் குற்றப்புலனாய்வு திணைக்களம் மூலம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் வரையறுக்கப்பட்ட பேர்பச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனம், முன்னாள் நிதியமைச்சர் சந்தேஷ் ரவீந்திர கருணாநாயக்க, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் லக்ஷ்மன் அர்ஜுன மகேந்திரன், மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் பத்தினிகே சமரசிறி, அர்ஜுன ஜோசப் அலோசியஸ், கசுன் ஓசதி பலிசேன, ஜெப்ரி ஜோசப் அலோசியஸ், சித்தரஞ்சன் ஹுலுகல்ல, முத்துராஜா சுரேந்திரன், ஹஜான் கார்த்தியே புஞ்சிஹேவா, ஊழியர் சேமலாப நிதியத்தின் பிரதம சந்தைப்படுத்துநர் பத்துகொடஹேவா இந்திக சமன் குமார மற்றும் அரச கடன் திணைக்களத்தின் சிரேஷ்ட முகாமையாளர் சங்கரப்பிள்ளை பத்மநாதன் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரால் குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
பிணைமுறி மோசடியால் பொருளாதாரத்துக்கு ஏற்பட்ட தாக்கம் குறிப்பாக கணக்கிடப் படவில்லை. ஆயினும் இலங்கை மத்திய வங்கியால் முறையே இலங்கை மத்திய வங்கி நிதி விடயத்தில் 78,109,050.60 ரூபா மற்றும் ஊழியர் சேமலாப நிதி விடயத்தில் 6,989,277,943.63 ரூபா என்ற வகையில் பேர்பச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்ட நஷ்டத்தை அறவிடுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
சட்டமா அதிபரின் (CF)/31/2016ஆம் இலக்க மற்றும் 2025.09.11ஆம் திகதிய கடிதத்தின் பிரகாரம் 2015.02.27 ஆம் திகதியன்று இடம்பெற்ற மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி குறித்து (PDP) 01/05/2019ஆம் இலக்க குற்றப்பத்திரம் மூலம் 10 பேருக்கு எதிராகவும், 2016.03.29ஆம் திகதி இடம்பெற்ற பிணைமுறி மோசடி தொடர்பில் (AHC) (DAP) 2445/21ஆம் இலக்க குற்றப்பத்திரப் பகிர்ப்பு மூலம் 11 பேருக்கு எதிராகவும் , 2016.03.31ஆம் திகதி இடம்பெற்ற பிணைமுறி மோசடி தொடர்பில் (HC) (DAP) 2446/21ஆம் இலக்க குற்றப்பத்திரமூடாக 10 பேருக்கு எதிராகவும் மூவர் உள்ளங்கிய மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட குற்றப்பத்திரத்தில் உள்ளடங்கிய அரச சொத்துக்களின் கீழான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எதிராளிகளின் ஆரம்ப எதிர்ப்புக்கள் தொடர்பில் கருத்திற் கொண்டு அக்குற்றச்சாட்டுகளில் இருந்து எதிராளிகளை விடுவிக்குமாறு மூவரடங்கிய மேல் நீதிமன்றம் வழங்கிய கட்டளைகளை மீளாய்வு செய்வதற்காக சட்டமா அதிபர் திணைக்களத்தால் இலக்கம் (CA/CPA/ 34/22> CA/CPA/135/21 மற்றும் CA/CPA/15/22 ஆகிய மீளாய்வு விண்ணப்பங்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அழைக்கப்பட்டுள்ளதுடன், அந்நீதிமன்றம் மூலம் அந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதால், அதற்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தால் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த விண்ணப்பங்களை முன்னெடுத்துச் செல்வதற்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற வழக்கு நடவடிக்கைகள் காரணமாக 2019ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட குற்றப்பத்திரிகை தொடர்பில் மூவரடங்கிய மேல் நீதிமன்றங்களிலுள்ள வழக்கு நடவடிக்கைகள் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளன.
எதிராளியான தனது பெயர் குறிப்பிடப்பட்டதற்கு எதிராக ரவி கருணாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பிணைமுறி மோசடி ஊடாக உழைக்கப்பட்ட இலாபம் குறித்து பணத் தூய்தாக்கல் தடைச்சட்டத்தின் கீழ் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியால் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு வழக்குகளுக்கும் மேலதிகமாக இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, மகாபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நம்பிக்கை பொறுப்பு நிதியம், தேசிய சேமிப்பு வங்கி, ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபை ஆகிய நிறுவனங்கள் பேர்பச்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தின் பணம் அறவிடலுக்கான வழக்குகளை தொடுத்துள்ளதுடன், அந்த வழக்குகள் தற்போது விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளன என்றார்.
