Our Feeds


Wednesday, November 26, 2025

Sri Lanka

அனைத்து இன மாணவர்களும் ஒன்றாக கல்வி கற்க முடியுமான சூழலை ஏற்படுத்த வேண்டும் - மனோ கணேசன்!


நாட்டில் இன அடிப்படையில் இருக்கும் பாடசாலைகளை ரத்துச் செய்து, அனைத்து இன மாணவர்களும் ஒன்றாக கல்வி கற்க முடியுமான சூழலை ஏற்படுத்த வேண்டும். அதன் மூலமே நாட்டில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்தார்.



பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற   2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில்   கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.


அவர் அங்கு மேலும்  உரையாற்றுகையில்,


புதிய கல்வி மறுசீரமைப்புத் திட்டத்தில் தேசிய ஒருமைப்பாடு தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை. அத்துடன் குறைந்த வளங்களைக் கொண்ட பிரதேச கல்வி நடவடிக்கைகளுக்கு விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும். இந்த விடயங்கள் புதிய கல்வி மறுசீரமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதை கல்வி அமைச்சரான பிரதமர்  தெளிவுபடுத்த வேண்டும்.



கொழும்பு போன்ற பிரதேசங்களில் அனைத்து இன, மத மக்களும் இணைந்து வாழ்கின்றதை காண முடிகிறது. இங்கு தமிழ், சிங்களம்,கத்தோலிக்கம் முஸ்லிம் என பாடசாலைகள் பிரிக்கப்பட்ட நிலையிலேயே காணப்படுகிறது. இந்த சிந்தனை மாற்றப்பட வேண்டும். இன அடிப்படையிலான பாடசாலைகள் இல்லாமலாக்கப்பட வேண்டும்.


எமது சிறுபராயத்தில் நாட்டில் தமிழ் பாடசாலை, சிங்களப் பாடசாலை, முஸ்லிம் பாடசாலை என இன,மத ரீதியாக பிரித்து பாடசாலைகளை உருவாக்கி விட்டு இப்போது சிறுவர்கள், பெரியவர்களான பின்னர்  எல்லோரும் இலங்கையர்களாக எழுந்திருக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகின்றது. இப்போது காலம் கடந்து விட்டது.



அதற்காக கொழும்பிலுள்ள பாரிய அளவிலான ஆனந்தா,,நாலந்தா, இந்துக் கல்லூரி போன்ற சிங்கள, தமிழ், முஸ்லிம் பாடசாலைகளை அவ்வாறு உடனடியாக மாற்றி விட முடியாது என்பது எமக்குத் தெரியும். ஆனாலும் இப்போது எங்கிருந்தாவது அதை ஆரம்பிக்க வேண்டும்.


கொழும்பில் மூன்று தேசிய பாடசாலைகள் இயங்குகின்றன.அவற்றில் ரோயல் கல்லூரி, டி.எஸ் சேனநாயக்க கல்லூரி, இசிபத்தன கல்லூரிகள் உள்ளடங்குகின்றன. இந்த பாடசாலைகளில் தமிழ் மொழி மூல வகுப்புகள் குறைக்கப்பட்டு வருகின்றன. நான் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக பதவி வகித்த போதும் அது தொடர்பில் தர்க்கம் புரிந்துள்ளேன். குறிப்பாக ரோயல் கல்லூரியில் தமிழ் மூல வகுப்புகள் குறைக்கப்பட்டு வருகின்றன.


அதேபோன்று அவ்வாறான வகுப்புகளிலும் மாணவர்களின் எண்ணிக்கை 20, 22 ஆகவே காணப்படுகிறது. சாதாரணமாகவே சுமார் 40 மாணவர்கள் இருக்க வேண்டும். சிங்கள மொழி மூலமான பத்து வகுப்புகள் காணப்படும் போது தமிழ் மொழி மூலமாக இரண்டு வகுப்புகளே காணப்படுகின்றன. எனினும் தமிழ்மொழி பேசும் மக்களே இந்த மாவட்டத்தில் 60 வீதமாக காணப்படுகின்றனர். அந்த வகையில் 50 வீத என்ற வகையில் வகுப்புகளைக் கொண்டுவர முடியும். புதிய அரசாங்கம் மாற்றங்களை கொண்டு வருவதாக தெரிவிக்கின்றது. இந்த அரசாங்கம் அவ்வாறான மாற்றங்களை கொண்டு வர வேண்டும்.

மேலும் சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கராவை இந்த நாட்டின் கல்வியின் தந்தையென தெரிவித்தாலும் நன் அதனை ஏற்றுக்கொள்வதில்லை. ஏனெனில் நாட்டில் இலவச கல்வியை அவர் அறிமுகப்படுத்தினாலும் தோட்டப்பாடசாலைகள் தொடர்பில் முறையாக கவனம் செலுத்தவில்லை. தோட்டப்பாடசாலைகள் 1978ஆம் ஆண்டே இலவச கல்வி திட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டன. அதனாலே கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகளின்போது, இவ்வாறான குறைந்த வளங்கள்கொண்ட பாடசாலைகள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »