தெஹிவளையில் தமிழ், முஸ்லிம் மாணவர்களுக்கு இருக்கும் ஒரே பாடசாலையான மீளாத் பாடசாலை இடப்பற்றாக்குறைக்கு தீர்வுகாண வலயக்கல்வி பணிமனையால் இனம் காணப்பட்டிருக்கும் காணியை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (25) இடம்பெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலி தெஹிவளை மீளாத் பாடசாலை விவகாரத்தில் முழுமையாக ஈடுபட்டு வருவதுடன் அவரது பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து நிதி ஒதுக்கியமைக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
குறித்த பாடசாலை 73 வருட பழைமைவாய்ந்த இந்த பாடசாலை 23பேர்ச் காணியில் அமைந்துள்ளது.அங்கிருக்கும் கட்டிடம் ஒரு தனிநபரினால் கட்டிக்கொடுக்கப்பட்டதாகும். அந்த பாடசாலையில் தற்போது 500 மாணவர்கள் வரை கல்வி கற்று வருகிறார்கள்.அதில் 120 மாணவர்கள் கல்வி கற்பதற்கு இடமில்லாமல் பாடசாலையின் வெளிச்சூழலில் கல்வி கற்று வருகிறார்கள். இன்னும் 240 மாணவர்கள் அந்த பாடசாலைக்கு விண்ணப்பித்து, எதிர்பார்த்து இருக்கிறார்கள்.
அந்த பாடசாலைககு அருகில் இருந்த சுமங்கல பாடசாலை, மூடப்பட்டு கைவிடப்பட்டடிருந்த நிலையில், வலயக்கல்வி பணிமனையால், அந்த பாடசாலையை புதுப்பித்து எடுத்துக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன் பிரகாரம் அங்குள்ள மக்கள் சுமார் 30 இலட்சம் ரூபா செலவிட்டு, அந்த பாடசாலையை புதுப்பித்து, அங்கு கல்வி நடவடிக்கையை ஆரம்பிக்க முற்பட்டபோது,, இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை பிரச்சினைகளை உருவாக்கிய ஒரு மதகுரு அந்த பகுதியில் இருக்கிறார். அவரின் தலைமையில் ஒரு குழு அங்கு சென்று, திருத்தப்பட்ட பாடசாலை கட்டிடத்துக்குள் நுளைய முடியாதவாறு தடைகளை ஏற்படுத்தி இருந்தது.
பின்னர் அந்த பாடசாலைக்கு அந்த பிரதேசத்தில், 6 இடங்கள் வலயக்கல்வி பணிமனையால் காட்டப்பட்டு, தற்போது 4 இடங்கள் இனம் காணப்பட்டிருக்கின்றன.அதில் ஒரு இடத்தையாவது வழங்க நடவடிக்கை எடுக்கமாக இருந்தால், எமது வியாபாரிகளின் உதவியுடன் அங்கு கட்டிடங்களை கட்டி அந்த மாணவர்கள் கல்வி கற்பதற்கு உதவி செய்ய முடியுமாகி இருக்கும். பிலிந்தலை கல்வி வலயத்தில் இருக்கும் தமிழ் மொழி மூலமான ஒரே பாடசாலை இதுவாகும்.
அங்கு தமிழ், முஸ்லிம் மக்கள் அதிகம் வாழ்ந்துவருகின்றனர். கடந்த 19ஆம் திகதி வலயக்கல்வி பணிப்பாளர் தலைமையில் கூட்டம் ஒன்று இடம்பெற்றது என்றாலும் அந்த கூட்டத்தில் அந்தி பிரதேச ஆளும் கட்சி பாராளுமன்றஉறுப்பினராக சமன்மலி, அதில் கலந்துகொள்ள தவறியதால், அதில் எந்த தீர்மானமும் எடுக்கப்படாமல் போயுள்ளது. அதனால் தெரிவு செய்யப்பட்ட 4 காணிகளில் ஒரு காணியை வழங்கி, அந்த பாடசாலை மாணவர்கள் நிம்மதியாக கல்வி கற்பதற்கு உதவி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என்றார்.
