Our Feeds


Wednesday, November 26, 2025

Zameera

வெருகல் பிரதேசத்தில் பெருமளவான காணிகளை வனவிலங்கு துறை உரிமை கோருவதால் அந்த பிரதேச மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை வழங்குக - இம்ரான் மஹ்ரூப்


 (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

வெருகல் பிரதேசத்தில் பெருமளவான காணிகளை வனவிலங்கு துறை உரிமை கோருவதால் அந்த பிரதேச மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட  உறுப்பினரான இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.

வெருகல் பிரதேசத்தில் மக்கள் வசிக்கும் காணிகளை வனவிலங்கு துறை உரிமை கோருவது தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட எம்.பியான எஸ். குகதாசனால் பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை முன்வைக்கப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை வழிமொழிந்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேசத்தில் நிலவும் இந்தப் பிரச்சினை மிகவும் பாதிக்கப்பட்ட ஒன்றாக பார்க்கப்படுகின்றது. வெருகல் 32,042 ஏக்கர் நிலப்பகுதியை கொண்ட பிரதேசத்தில் 25,242 ஏக்கரை வனவிலங்குதுறை உரிமை கோருகின்றது. அத்துடன் மேலும் மீதமுள்ள பகுதியில் 6,800 ஏக்கரையும் இன்னும் பல அமைப்புகள் உரிமை கோருகின்றன. அதிலும் எல்லை தொடர்பான பிரச்சினைகள் காணப்படுகின்றன. அந்த அடிப்படையில் இலங்கையில் எந்தவொரு பிரதேச செயலக பிரிவும் இவ்வாறு இருப்பதற்கு வாய்ப்பில்லை.

இப்போது வனவிலங்கு துறை உரிமை கோரும் இந்த பிரதேச காணியிலேயே பிரதேச செயலகம், பிரதேச சபை மற்றும் 10 கிராம அலுவலகங்கள், மருத்துவமனை, நீர்வழங்கல் சபை உள்ளிட்ட அரச கட்டிடங்கள் அமைந்துள்ளன. இதனால் குறித்த பிரச்சினை இந்த பிரதேசத்தின் அபிவிருத்தியில் பெரிதும் தாக்கம் செலுத்தும் காரணத்தினால் இந்த விடயத்திற்கான தீர்வை அரசாங்கம் வழங்க முன்வர வேண்டும்.

பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழு மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் இது தொடர்பில் பேசப்படுகின்றது. இதனால் இதற்கான தீர்வுகளை வழங்கும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. இந்த பிரதேசம் யுத்தம், வெள்ளப் பெருக்கு உள்ளிட்ட பல்வேறு அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட பகுதியாகும்.

இந்நிலையில் இதற்கான தீர்வை நாங்கள் எட்டாவிட்டால்  செய்யும் அபிவிருத்தி விடயங்களுக்கும் இது தடையாக அமையும். இவ்வாறான பிரச்சினைகள் இருக்கும் போது நிதி ஒதுக்கீடுகளையும் அந்த பிரதேச செயலகங்களால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திகளில் பயன்படுத்த முடியாத நிலைமை ஏற்படும். இதனால் இதற்கு அரசாங்கம் உரிய தீர்வை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »