Our Feeds


Wednesday, November 26, 2025

Sri Lanka

ராஜபக்ச ஆட்சியில் மீனவர்கள் சுடப்பட்டனர் - பிரதி அமைச்சர்!


“ராஜபக்ச ஆட்சிகாலத்தில்தான் மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மண்ணெண்ணெய் விலைகள் அதிகரிக்கப்பட்டன. இவற்றை மறந்து தற்போது மீன்பிடித்துறை பற்றி கதைக்கின்றனர்.” என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.


இது தொடர்பில் பிரதி அமைச்சர் ரத்ன கமகே மேலும் கூறியவை வருமாறு,



இலங்கையில் உற்பத்தி பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு உறுதுணையாக நிற்கும் மூன்று துறைகளில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சும் ஒன்று என்பதை கூறியாக வேண்டும். எனவே, அத்துறை தொடர்பில் உரிய வகையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.



2026ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் எமது அமைச்சுக்கு போதுமானளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஜனாதிபதிக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.



நாடு மக்களுக்கு தேவையான புரோட்டின் தேவையை நாம் பூர்த்தி செய்துகொடுக்க வேண்டும். அந்திய செலாவணியை கொண்டுவருவதற்குரிய ஏற்பாடுகளையும் வலுப்படுத்த வேண்டும். நவீன தொழில்நுட்பத்துடன் நாம் முன்னோக்கி செல்ல வேண்டும். அதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.



எமது அமைச்சுக்கு 2026ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் 10.6 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல கடந்த காலங்களில் இலங்கை கடற்றொழில் கூட்டு தாபனத்திலும் கைவைத்தனர். கடந்த காலங்களில் நாசமாக்கப்பட்ட எமது அமைச்சுசார் 10 நிறுவனங்களை வலுப்படுத்துவதற்கு  5 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.



மேலும் 2000 ஆயிரம் மில்லியன் ரூபாவும் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. மாகாணசபைகளின் மீன்பிடி அமைச்சுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது எமது அமைச்சுக்கு மட்டும் 2026 வரவு - செலவுத் திட்டத்தில் 15 பில்லியனுக்கும் மேல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வரலாற்றில் இம்முறையே இவ்வாறு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.



மீன்பிடித்துறையில் கடந்த காலங்களில் பல்வேறு பிரச்சினைகள் தோற்றுவிக்கப்பட்டிருந்தன. அந்த சவால்களை எதிர்கொண்டு பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருகின்றோம். வடக்கிலும், கிழக்கிலும் மீன்பிடித்துறைமுகங்களை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



எமது ஆட்சியில் மண்ணெண்ணெய் விலை குறைக்கப்பட்டது. ஆனால் மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பு மற்றும் மீனவர்கள் கொலை என்பன தமது தந்தையின் ஆட்சியில் நடைபெற்றது என்பதை மறந்து இங்கு பேசுகின்றனர். என குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »