( எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்ளல், சுபோதினி அறிக்கை பற்றி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதற்கு முன்னர் ஆசிரியர் சேவை பிரமாணக் குறிப்பை கற்க வேண்டும். ஆசிரியர் - அதிபர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம். பொருளாதாரப் பாதிப்பில் இருந்து மீட்சிப்பெற்றுக்கொண்டு தான் அனைத்து விடயங்களையும் கோரிக்கைகளையும் செயற்படுத்த வேண்டும் என தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (25) நடைபெற்ற 2026 வரவு செலவுத் திட்டத்தின் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது;
நாட்டின் எதிர்காலம் சிறுவர்கள் கையில் ஆகவே அவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்க வேண்டும். 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்த தேசிய உற்பத்தியில் கல்விக்கு 6 சதவீத மானியம் ஒதுக்க வேண்டும் என்று குறிப்பிட்டோம்.இதில் எவ்வித மாற்றமும் கிடையாது. கல்வித்துறைக்கான ஒதுக்கீடு கட்டம் கட்டமாக அதிகரிக்கப்படும்.
கல்வி சேவையில் நிலவும் ஆளணி பற்றாக்குறை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். 2017 ஆம் ஆண்டுக்கு பின்னர் கல்வி நிர்வாக சேவைக்கு இந்த ஆண்டு 502 பேர் இணைத்துக் கொண்டார்கள். அதேபோல் ஆசிரியர் கல்வி சேவைக்கு 580 பேர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.
ஆசிரியர் கல்லூரியில் இருந்து வெளியேறிய 4131 பேர் இந்த ஆண்டு ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்ளப்படவுள்ளார்கள். அதிபர் சேவைக்கான போட்டிப்பரீட்சைக்குரிய வர்த்தமானி அறிவித்தல் இந்த மாதம் வெளியிடப்பட்டது. ஆகவே அதிபர் சேவையில் நிலவும் வெற்றிட பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும்.
அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்ட பட்டதாரிகள் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.இவர்களின் போராட்டம் பற்றி எதிர்க்கட்சித் தலைவர் தெரியாத விடயங்களை சபையில் குறிப்பிடுகிறார்.இந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் 2023.01.27 ஆம் திகதி வெளியிடப்பட்டு, விண்ணப்பம் கோரப்பட்டது. 2023.03.25 ஆம் திகதி போட்டிப்பரீட்சை நடைபெறவிருந்த நிலையில் அதற்கு முன்னர் இந்த வர்த்தமானிக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் 4 மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டது.
நாங்களா உயர்நீதிமன்றத்துக்கு சென்றோம். எதிர்க்கட்சியின் தொழிற்சங்கத்தினர்கள் தான் நீதிமன்றம் சென்றார்கள். இந்த மனுக்கல் தற்போது நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சினைக்கு வெகுவிரைவில் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும்.
பட்டதாரிகளை இரண்டுக்கு : இரண்டு என்ற முறைமையின் பிரகாரம் ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்ளுமாறு எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிடுகிறார்.முதலில் இவருக்கு 1994 ஆம் ஆண்டு ஆசிரியர் சேவை பிரமாணக் குறிப்பு பற்றி யாராவது சொல்லிக் கொடுங்கள். பாவம் தெரியாத விடயங்களை குறிப்பிட்டு நெருக்கடிக்குள்ளாகுகிறார்.
சுபோதினி அறிக்கை பற்றி தெரியாத விடயங்களை குறிப்பிடுகிறார். ஆசிரியர் - அதிபர் சம்பள பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.ஆசிரியர் - அதிபர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம்.பொருளாதார பாதிப்பில் இருந்து மீட்சிப்பெற்றுக்கொண்டு தான் அனைத்து விடயங்களையும் கோரிக்கைகளையும் செயற்படுத்த வேண்டும் என்றார்.
