Our Feeds


Sunday, December 14, 2025

Zameera

உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு கௌரவிப்பு


 

 

- க.பொ.த உயர்தரப் பரீட்சையில் அனைத்துப் பாடப் பிரிவுகளிலும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற 361 மாணவர்களுக்கு தலா 100,000 ரூபா வழங்கப்பட்டது

 

ஜனாதிபதி நிதியத்தால் செயல்படுத்தப்படும் 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட அளவில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை கெளரவிக்கும் மேல் மாகாண நிகழ்ச்சித்திட்டம் இன்று (14) காலை அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்றது.

 

இந்த நிகழ்வில் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களைச் சேர்ந்த உயர்தரப்பரீட்சையில் முதலிடம் பெற்ற 361 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டு தலா 100,000 ரூபா ஊக்கவிப்புக் கொடுப்பனவு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதற்காக ஜனாதிபதி நிதியம் 36.1 மில்லியன் ரூபா செலவிட்டுள்ளது.

 

நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, நாட்டின் மனித வளத்தை மேம்படுத்த அரசாங்கம் எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக இருப்பதாகக் கூறினார். மக்களுக்குச் சொந்தமான ஜனாதிபதி நிதியம், மக்களுக்கு மேலும் நெருக்கமாகக் கொண்டு செல்வதிலும், நாட்டின் பிள்ளைகளுக்கு கல்வி வழங்குவதிலும் ஆற்றிய பங்கைப் பிரதமர் பாராட்டினார்.

 

மேலும் பேசிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,

 

கல்வி அமைச்சராக இந்த நிகழ்வில் பங்குபற்ற முடிந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஜனாதிபதி நிதியத்தின் பங்கு பற்றி நீங்கள் அனைவரும் அறிவீர்கள். மக்களுக்கு உரிய நிதியத்தை உங்களுக்கு நெருக்கமாகக் கொண்டுவர நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில், உயர்தர பரீட்சையில் முதலிடம் பெற்றவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. உயர்தர பரீட்சையில் ஒவ்வொரு பாடத்திலும் அதிக புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுக்கு அவர்கள் விரும்பும் வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் படிக்க புலமைப்பரிசில் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

 நீங்கள் அனைவரும் இதற்கு விண்ணப்பிக்குமாறு நான் கோருகிறேன். மனித வளங்களை வளர்த்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும். உலகின் சிக்கலான தன்மையைப் புரிந்துகொண்டு மனித வளங்களை உருவாக்க வேண்டும். அந்த மனித வளத்தை உருவாக்க ஒரு அரசாங்கமாக எதையும் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம். அதற்காக, 2026 முதல் இந்த நாட்டின் கல்வி முறைமையை மாற்றியமைக்க திட்டமிட்டுள்ளோம். அறிவின் அடிப்படையில் மட்டுமல்ல, அனைத்து துறைகளிலும் திறமையான சந்ததி நமக்குத் தேவை.

 

பரீடசையில் சித்தியடைவதை மட்டும் கல்வியிலிருந்து


நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இந்த நாட்டிற்கும் உலகிற்கும் தேவையான சிறந்த பிரஜைகளை உருவாக்க விரும்புகிறோம். தொழில்நுட்பத்தின் மூலம் உலகம் வளர்ச்சியடைவது மிகவும் முக்கியம் என்றாலும், மனிதநேயம் இல்லாத தொழில்நுட்பம் இந்த உலகத்திற்கு பயனற்றது. நாம் அனுபவிக்க முடிந்த டித்வா சூறாவளியிலிருந்து அதை நாங்கள் நன்றாகப் புரிந்துகொண்டோம். அபிவிருத்தி மற்றும் தொழில்நுட்பம் பற்றி நாம் என்ன பேசினாலும், இயற்கையுடன் மோதும்போது, நாம் எவ்வளவு சிறியவர்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

 

இந்த சூறாவளி நமக்கு ஒரு பெரிய பாடத்தைக் கற்றுக் கொடுத்துள்ளது. இயற்கையை மறந்து மனிதகுலம் வளர்ச்சியைப் பற்றி சிந்திக்க முடியாது. அந்தப் பாடத்தை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். சுற்றுச்சூழலை நேசிக்கும், இயற்கையைப் பாதுகாக்கும், தலைமைத்துவம் கொண்ட, மற்றவர்களைப் பற்றிய சிந்திக்கும் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ளக் கூடிய மனித வளங்களை நாம் உருவாக்க வேண்டும்.

 

 

இந்த  கெளரவிப்பின் மூலம் நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இது உங்கள் எதிர்காலத்தில், நாட்டின் எதிர்காலத்தில் ஒரு முதலீடு. நீங்கள் எங்களுக்கு மதிப்புமிக்கவர் என்பதைக் இது எடுத்து காட்டுகிறது. நீங்கள் இந்த நிலைக்கு தனியாக வரவில்லை. உங்களுக்கு ஒரு நல்ல குடும்பச் சூழல் உள்ளது. நீங்கள் நல்ல ஆசிரியர்களைச் சந்தித்திருக்க வேண்டும். உங்களுக்கு சரியான இடங்களில் உங்களை வழிநடத்திய உறவினர்கள், ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் இருக்க வேண்டும். நீங்கள் அந்த அனைத்து சலுகைகளுடனும் இங்கு வந்துள்ளீர்கள். ஒவ்வொரு அரசாங்கமும் உங்கள் கல்விக்காக தலையிட்டுள்ளன. இந்த நாட்டு மக்களின் வரிப் பணத்தை அதற்காக பயன்படுத்தப்படுகிறது என்று சொல்ல வேண்டும். உங்களை இந்த நிலைக்கு கொண்டு வர ஒரு பெரிய கட்டமைப்பும் குழுவும் தலையிட்டுள்ளன. எனவே, அவர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டிய பொறுப்பு உங்களுக்கு உள்ளது என்றார்.

 

 தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ மற்றும் ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிகச் செயலாளர் மற்றும் ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் ரோஷன் கமகே ஆகியோரும் இங்கு தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

 

பாராளுமன்ற உறுப்பினர்களான சந்தன சூரியாராச்சி, சந்திம ஹெட்டியாராச்சி, பிரகீத் மதுரங்க, சம்பிக ஹெட்டியாராச்சி, மேல் மாகாண ஆளுநர் ஹனிப் யூசுப், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, கொழும்பு மாவட்ட செயலாளர் கினிகே பிரசன்ன ஜானக குமார, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஸ்ட பேராசிரியர் கபில செனவிரத்ன, ஜனாதிபதி நிதியத்தின் சிரேஸ்ட


அதிகாரிகள், மேல் மாகாண அரச அதிகாரிகள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மற்றும் பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »