(எம்.மனோசித்ரா)
நாட்டில் கடந்த வாரம் தித்வா புயலால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவினால் சுமார் 20 இலட்சத்துக்கும் அதிகளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்காக பல்வேறு நாடுகளிலிருந்தும் தொடர்ச்சியாக நிவாரண உதவிகள் கிடைக்கின்றன. அந்த மனிதாபிமான உதவிகள் சரியான முறையில் ஒருங்கிணைக்கப்பட்டு மக்களிடம் விநியோகிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக ஓர் உயர்மட்ட தேசியக் கண்காணிப்பு குழு நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதி பாதுகாப்பு அமைச்சர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தில் திங்கட்கிழமை (8) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இந்த இயற்கை அனர்த்தங்களால் இதுவரையில் 22 மாவட்டங்கள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக பல்வேறு நாடுகளிலிருந்தும் தொடர்ச்சியாக உதவிகள் கிடைத்து வருகின்றன. அனர்த்தத்துக்கு பின்னரான நடவடிக்கைகள் அனர்த்த நிவாரண மத்திய நிலையத்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சர்வதேச நாடுகளிடமிருந்து கிடைக்கப் பெறும் நிவாரணங்கள் முறையாக மக்களை சென்றடைய வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆலோசனை வழங்கியுள்ளார்.
அதற்கமையவே இவற்றை முகாமைத்துவம் செய்து கண்காணிப்பதற்காக என்னுடைய தலைமையில் உயர்மட்ட தேசியக் கண்காணிப்பு குழு நியமிக்கப்பட்டுள்ளது. இதில் முப்படை மற்றும் பொலிஸ் உட்பட துறைசார் உயர்மட்ட அதிகாரிகளும் உள்ளடங்குவர். உணவு, சுகாதாரம், அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளுக்கான உபகரணங்கள் மற்றும் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு நிவாரணங்கள் வெளிநாடுகளிலிருந்து கிடைத்துக் கொண்டிருக்கின்றன. இவற்றை எவ்வாறு முகாமைத்துவம் செய்து மக்களுக்கு விநியோகிப்பது என்பதற்கான ஆலோசனை இக்குழுவால் உரிய தரப்பினருக்கு வழங்கப்படும்.
மாகாண ஆளுநர்கள், மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம உத்தியோகத்தர்கள் என இந்த வலையமைப்பின் கீழ் அனர்த்த நிவாரணப்பணிகள் முன்னெடுக்கப்படும். இவை வெளிப்படை தன்மையுடன் முன்னெடுக்கப்படுவதை எமது குழு உறுதி செய்யும். அதற்கு கொள்கை ரீதியான ஆலோசனைகளும் வழங்கப்படும். வாரத்தில் 3 நாட்கள் இக்குழு கூடி, நிவாரணப்பணகள் எவ்வாறு முன்னெடுக்கப்படுகின்றன என்பது குறித்த அறிக்கையும் சமர்ப்பிக்கப்படும் என்றார்.
