(எம்.மனோசித்ரா)
நாட்டை வங்குரோத்து நிலைமைக்கு உள்ளாக்கியமைக்காக ராஜபக்ஷர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதேபோன்று நாட்டில் தற்போது நிலவும் அனர்த்த நிலைமை தொடர்பாக அரசாங்கத்திற்கு எதிராக குற்றவியல் வழக்குத் தாக்கல் செய்ய உத்தேசித்துள்ளோம். இந்த அனர்த்த நிலைமை 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைப் போலவே மிகவும் கொடுமையான சம்பவமாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் திங்கட்கிழமை (1) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டை வங்குரோத்து நிலைமைக்கு உள்ளாக்கியமைக்காக ராஜபக்ஷக்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதைப் போலவே, தற்போதைய அரசாங்கத்துக்கு எதிராக ஒரு குற்றவியல் வழக்கை தாக்கல் செய்ய எதிர்பார்க்கிறோம். கொழும்பில் உள்ள வணிக சமூகத்தின் பேச்சைக் கேட்கும் ஒரு கைப்பாவை இளவரசரே ஜனாதிபதியாக உள்ளார். பாராளுமன்றம் கூடியபோது, நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை குறித்து விவாதிக்க போதுமான கால அவகாசத்தை நாங்கள் கோரிய போதும், அரசாங்கம் தன்னிச்சையாக எதிர்க்கட்சிக்கு அந்த வாய்ப்பை மறுத்துவிட்டது.
ஏனெனில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டுள்ள இந்த நிலைமையில் இருந்து நாட்டை மீட்கத் தேவையான வெற்றிகரமான திட்டங்களை அவர்களால் செயல்படுத்த முடியவில்லை. குறிப்பாக, நவம்பர் 12ஆம் திகதியே இது குறித்த முதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பொதுவாக பெரிய நீர்த்தேக்கங்கள் மூன்று பணிகளைச் செய்கின்றன: ஒன்று, உற்பத்தி; இரண்டு, விவசாயத்திற்குத் தேவையான தண்ணீரை வழங்குதல்; அத்துடன் வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதும் அதன் மூலம் நடக்கிறது. எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி, தண்ணீரை படிப்படியாக வெளியேற்ற வேண்டும் என்று பொறியியலாளர்கள் அறிவித்திருந்தனர்.
