Our Feeds


Saturday, December 27, 2025

SHAHNI RAMEES

கொழும்பு மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் வரவு - செலவுத்திட்டத்தை திருத்தங்களுடன் முன்வைத்தால் ஆதரவளிக்கத் தயார்!

 

கொழும்பு மாநகரசபையில் தேசிய மக்கள் சக்திக்கு பெரும்பான்மை இல்லை என்பதை நாங்கள் உறுதிப்படுத்தி இருக்கிறோம். அதனால் மீண்டும் வரவு, செலவு திட்டம் சமர்ப்பிக்கும்போது, கொழும்பு மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் திருத்தங்களுடன் முன்வைத்தால், அதற்கு ஆதரவளிப்பது தொடர்பில் தீர்மானிப்போமென கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ரிஸா சரூக் தெரிவித்தார்.

கொழும்பு மாநகரசபையின் வரவு செலவ திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த கட்டமாக மேற்கொள்ளப்போகும் நடவடிக்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொழும்பு மாநகர சபையின் வரவு செலவு திட்டம் 57 க்கு 60 என்ற அடிப்படையில் தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. நான் அறிந்த அளவில், கொழும்பு மாநகரசபையில் இவ்வாறு வரவு செலவு திட்டம் ஒன்று தோற்கடிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் தடவையாகும்.

கடந்த  ஜூன் மாதம் 16ஆம் திகதி மாநகர மேயர் தெரிவின்போது, எங்களுக்கு பெரும்பான்மையாக 60 பேரின் ஆதரவு இருக்கும் நிலையில், மாகாண ஆணையாளர் பலவந்தமாக சட்டவிராேதமான முறையில் எங்களை ரகசிய வாக்கெடுப்புக்கு தள்ளிவிட்டு, எமது வெற்றியை அவர்கள் திருட்டுத்தனமாக பெற்றுக்கொண்டார்கள்.


என்றாலும் நாங்கள் பொறுமையாக செயற்பட்டு, வரவு செலவு திட்டத்தின்போது, கூட்டு எதிர்க்கட்சியாக ஒன்றா செயற்பட்டு, வரவு செலவு திட்டத்தை தோற்கடித்து எமது பலத்தை உறுதிப்படுத்தி இருக்கிறோம். வரவு செலவு திட்டத்தை தோற்கடிப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.

குறிப்பாக வரவு ,செலவு திட்ட முன்மொழிவில் அடுத்த வருடத்துக்கான வருமானமாக 28,8 பில்லியன் ரூபா எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இது எந்தவகையிலும் சாத்தியமில்லை. பொதுவாக வருடம் ஒன்றுக்கு 17, 18 பில்லியன் ரூபாவே எதிர்பார்க்க முடியும்.

அத்துடன் பொய் வாக்குறுதிகளை வழங்கி, பொய்யைக்கொண்டே மாநகர ஆட்சியை கொண்டுசெல்லவே இவர்கள் முயற்சித்தார்கள். அதனால் இந்த பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க தீர்மானிதே, வரவு செலவு திட்டத்தை தோற்கடிக்க நாங்கள் தீர்மானித்தோம்.

மீண்டும் 14 நாட்களுக்குள் திருத்தப்பட்ட வரவு செலவு திட்டம் ஒன்றை அவர்கள் சமர்ப்பிக்க வேண்டும். அதன்போது கொழும்பு மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றக்கூடிய, மக்களுக்கு நன்மை தரக்கூடிய, நடைமுறைக்கு சாத்தியமான வரவு ,செலவு திட்டம் ஒன்றை சமர்ப்பித்தால், அதற்கு ஆதரவளிப்பது தொடர்பில் தீர்மானிக்க முடியும். இல்லாவிட்டால், அதனையும் நாங்கள் தோற்கடிப்போம்.

இவர்கள் தெரிவித்திருப்பதுபோன்று 28 பில்லியன் ரூபா வருமானமாக பெற்றுக்கொள்வதாக இருந்தால், மக்களிடமிருந்து பாரியளவில் வரி அறவிடவேண்டிவரும். ஆனால் மாநகரசபை கட்டளைச்சட்டத்தின் பிரகாரம் வரிப்பணம் நூற்றுக்கு  25 முதல் 35 சதவீதம் வரையே அதிகரிக்க முடியும். அதனால் அவர்கள் மறைமுகமான முறையில் வரி அதிகரிப்பார்கள். வரி அதிகரிக்கப்போவதில்லை என தெரிவிப்பதில் எந்த உண்மையும் இல்லை என்றார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »