Our Feeds


Wednesday, December 24, 2025

Zameera

ஜனாதிபதி, அமைச்சரவையைப் போன்றே அரசியலமைப்பு சபைக்கும் தவிர்க்க முடியாத பொறுப்பு உள்ளது முன்னேற்ற பாதைக்கு தடையாக இருக்க வேண்டாம்


 (எம்.மனோசித்ரா)

ஜனாதிபதி, அமைச்சரவைக்கும் நாடு தொடர்பில் பாரிய பொறுப்பு காணப்படுவதைப் போன்று, அரச பொறிமுறையைக் கொண்டு செல்வதில் அரசியலமைப்பு சபைக்கும் தவிர்க்க முடியாத பொறுப்பு காணப்படுகிறது. எனவே நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கான முயற்சிகளுக்கு தடையாக செயற்படாமல், அவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அரசியலமைப்பு சபையை கோருவதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

நாட்டுக்கு நிரந்தமான கணக்காய்வாளர் ஒருவர் அவசியமாகும். எனவே தான் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் பொறுத்தமான தகுதிகளுடையவர்களது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. இது தொடர்பில் அரசியலமைப்பு சபையே இறுதி தீர்மானத்தை எடுக்க வேண்டும். அவ்வாறில்லை எனில் ஜனாதிபதி பரிந்துரைத்துள்ளவர்கள் தொடர்பில் ஏதேனும் சிக்கல் காணப்படுமாயின் அதனைக் கூற வேண்டும்.

அவ்வாறன்றி முன்வைக்கப்படும் பெயர்கள் தொடர்ந்தும் நிராகரிக்கப்படும் பட்சத்தில் இந்த துறை தொடர்ந்தும் வீழ்ச்சிப்பாதையிலேயே செல்லும். ஜனாதிபதி, அமைச்சரவைக்கும் நாடு தொடர்பில் பாரிய பொறுப்பு காணப்படுவதைப் போன்று, அரச பொறிமுறையைக் கொண்டு செல்வதில் அரசியலமைப்பு சபைக்கும் தவிர்க்க முடியாத பொறுப்பு காணப்படுகிறது.

இதனை அரசியலமைப்பு சபை புரிந்து கொள்ள வேண்டும். இது விளையாட்டல்ல. எனவே நாடு குறித்து முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும் போது அதற்கு ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும். ஜனாதிபதி மிகத் தகுதியானவர்களது பெயர்களையே பரிந்துரைத்துள்ளார். ஆனால் அரசியலமைப்பு சபை அதற்கமைய செயற்படாத நிலைமையே காணப்படுகிறது.

எனவே வெகு விரைவில் அரசியலமைப்பு சபையின் உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் தமது பொறுப்பை சரிவர நிறைவேற்றுவர் என எதிர்பார்க்கின்றோம். அரசியலமைப்பு சபை உள்ளிட்டவை நாடு முன்னோக்கிப் பயணிக்கும் போது அதனை தடுப்பதற்காக நிறுவப்பட்டவையல்ல. மாறாக அவற்றை மேலும் வலுப்படுத்தி நடைமுறைப்படுத்துவதை உறுதிப்படுத்துவதற்காகவேயாகும். எனவே கணக்காய்வாளர் ஒருவரை நியமிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கோருகின்றோம் என்றார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »