Our Feeds


Monday, February 16, 2026

SHAHNI RAMEES

சவுதி அரேபியாவிடமிருந்து இலங்கைக்கு 50 மெட்ரிக் தொன் பேரீச்சம்பழங்கள் நன்கொடை

ஊடக அறிக்கை - பெப்ரவரி 16, 2026

​புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு சவுதி அரேபிய

இராச்சியத்தினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 50 மெட்ரிக் தொன் பேரீச்சம்பழங்களை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு, இலங்கைக்கான சவுதி தூதுவர் காலித் பின் ஹமூத் அல்-கஹ்தானி அவர்களின் தலைமையில் இன்று (16-02-2026) பிற்பகல் கொழும்பிலுள்ள சவுதி தூதரகத்தில் நடைபெற்றது.

​மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையத்தினால் (KSrelief) வழங்கப்பட்ட இந்த பேரீச்சம்பழ நன்கொடையை, மத மற்றும் கலாசார விவகார பிரதி அமைச்சர் முனீர் முலப்பர் பொறுப்பேற்றுக்கொண்டார்.

​இந்நிகழ்வில் பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி, வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, சவுதி நிவாரண மையத்தின் (KSrelief) பிரதிநிதி, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் மற்றும் அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். அத்துடன் அகில இலங்கை ஜமியத்துல் உலமா சபையின் தலைவர், பொதுச்செயலாளர் உள்ளிட்ட மதத் தலைவர்கள் பலரும் இதில் பங்கேற்றனர்.

இங்கு உரையாற்றிய பிரதி அமைச்சர் முனீர் முலப்பர் குறிப்பிட்டதாவது:

​"சவுதி அரேபியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை இந்த நன்கொடை மேலும் உறுதிப்படுத்துகிறது. ரமழான் காலத்தில் இந்நாட்டு முஸ்லிம் மக்களுக்காக மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம் வழங்கும் இந்த ஒத்துழைப்பை நாங்கள் பெரிதும் பாராட்டுகிறோம். எதிர்காலத்தில் இந்த உறவு மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கிறேன்."

​இந்த பேரீச்சம்பழங்கள் நாடு முழுவதிலும் உள்ள மசூதிகள் ஊடாக தேவையுடைய குடும்பங்களுக்கு விநியோகிக்கப்பட உள்ளன.

​ஊடகச் செயலாளர்,

மத மற்றும் கலாசார விவகார பிரதி அமைச்சர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »