Our Feeds


Saturday, February 7, 2026

Zameera

ஹிஸ்புல்லாஹ்வின் கோரிக்கைக்கு பதிலளித்தார் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார


 குருக்கள் மட விவகாரம்: ஹிஸ்புல்லாஹ்வின் கோரிக்கை நியாயமானது, அவரது நல்ல கோரிக்கைகளை பாராட்டுகின்றேன்.

- ஹிஸ்புல்லாஹ்வின் கோரிக்கைக்கு பதிலளித்தார் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார.

--------------------------------------------

குருக்கள் மடத்தில்  வலிந்து காணாமலாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ள முஸ்லிம் சகோதரர்களின் ஜனாஸாக்களை தோண்டியெடுத்து அவர்களது குடும்பத்தினர் விரும்பியவாறு மார்க்க அடிப்படையில் மீள் அடக்கம் செய்வதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கும்  அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (06) நிலையியற் கட்டளை 27 2இன் கீழ்  நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தா்ர்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

1990 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12ஆம் திகதி புனித ஹஜ் கிரிகைகளை நிறைவு செய்து விட்டு தங்களது வீடுகளுக்கு திரும்பிக் கொண்டிருந்த முஸ்லிம் யாத்திரியர்கள் கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதயில் குருக்கள் மடம் எனும் இடத்தில் தமிழீல விடுதலைப்புலிகளினால் வலிந்து காணாமலாக்கப்பட்டுள்ளனர் என காத்தான்குடியைச் சேர்ந்த அப்துல் மஜீத் முகம்மது றவூப் என்பவரினால் களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றில் 2014.04.09ஆம் தகதி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பிலே கடந்த வரவு செலவுத் திட்ட நீதி அமைச்சு தொடர்பான விவாதத்தின் போதும் நான் பேசியிருந்ததை நினைவுகூறுகின்றேன். 

மேற்படி சம்பவத்தின்போது 100 க்கும் மேற்பட்வர்கள் வலிந்து காணாமலாக்கப்பட்டு அவர்களது உடமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு இறுதியில் கொலை செய்யப்பட்டு குருக்கள்மட கடற்கரையை அண்டிய ஒரு பகுதியில் புதைக்கப்பட்டுள்ளார்கள் என்ற நியாயமான சந்தேகத்தின் அடிப்படையில் நீதிமன்றத்தின் மேலான தலையீட்டைக் கோரிய போது, 2014.04.28ஆம் திகதியாகிய சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பே குறித்த புதைகுழியை அகழ்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உரிய அரச திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு நீதிவான் கட்டளை பிரப்பித்திருந்தார். எனினும் இன்றுவரை குறித்த புதைகுழி அகழப்படவில்லை. 

மேற்படி சம்பவமானது வலிந்து காணாமலாக்கப்பட்ட 100 க்கும் மேற்பட்ட இலங்கைப் பிரஜைகள் தொடர்பானதாகும். தங்களது உறவினர்களுக்கும் அன்பர்களுக்கும் என்ன நேர்ந்தது என்பதை அறிகின்ற தார்மீக உரிமை பாதிக்கப்பட்ட அனைவருக்கும் காணப்படுகின்றது. அதன் அடிப்படையில் குருக்கள்மடப் புதைகுழியில் மேற்படி வலிந்து காணாமலாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்தால் புதைக்கப்பட்ட எச்சங்களைத் தோண்டியெடுத்து மரபணுப்பரிசோதனைகள் மூலம் அடையாளங்கண்டு அவ் எச்சங்களை அவர்களது குடும்பத்தினர் விரும்பியவாறு மார்க்க அனுஷ்டானங்களை மேற்கொண்டு கடமைகளை நிறைவேற்றி மீள் அடக்கம் செய்வதும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதும் இவ் உயரிய சபையினுடைய கடமையாகும். 

இவ்விடயம் தொடர்பில் இவ் உயரிய சபையில் நான் பேசிய பின்பு நீங்களும் அவ்விடத்திற்கு நேரடியாக விஜயம் செய்து பார்வையிட்டு அகழ்வு பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அதற்குத் தேவையான சகல ஒத்துழைப்புகளையும் வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தீர்கள்.  இதற்காக பாதிக்கட்ட மக்கள் சார்பாக உங்களுக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

எனினும் இதற்குத் தேவையான நிதி விடுவிக்கப்படாமை காரணமாகவே இவ்விடயம் இன்னும் பிற்படுத்தப்பட்டு செல்வதாக அறிகின்றேன். ஏற்கனவே இவ் அகழ்வுப் பணிக்காக சுமார் இருபத்தொன்பது இலட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவ் ஒதுக்கப்பட்ட நிதியானது குறித்த அகழ்வுப் பணிக்கு விடுவிக்கப்படாததன் காரணமாக கடந்த 2026.01.06ஆம் திகதிய வழக்குத் தவணையின் போது நீதிவான்  மேலதிக நிதியினைக் கோரியிருப்பதாகவும் நான் அறிகின்றேன்.  

நீதிவானின் உத்தரவின் பேரில் குருக்கள்மட மனிதப் புதைகுழி அகழ்வுப்பணியை மண்முனை தென்எருவில்பற்று, களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகமே பொறுப்பேற்றுள்ளதாக அறிகின்றேன். எனவே இதற்குத் தேவையான மொத்த நிதியையும் குறித்த பிரதேச செயலகத்திற்கு விடுவித்து  தங்களது உறவுகளின் ஜனாஸாக்களையாவது மார்க்க முறைப்படி நல்லடக்கம் செய்வதற்கு ஆவண செய்யுமாறு தங்களிடம் வினயமாகக் கேட்டுக் கொள்கின்றேன்.

எனவே வலிந்து காணாமலாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ள முஸ்லிம் சகோதரர்களின் ஜனாஸாக்களை தோண்டியெடுத்து அவர்களது குடும்பத்தினர் விரும்பியவாறு இஸ்லாமிய மார்க்க அடிப்படையில் கடமைகளை நிறைவேற்றி மீள் அடக்கம் செய்வதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா? என கேட்கிறேன் என்றார்.

இதற்கு பதிலளித்த நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்வின் கோரிக்கை நியாயமானது, அதற்கான நிதி மிக விரைவில் ஒதுக்கீடு செய்யபப்படும் என்பதோட நான் தனிப்பட்ட ரீதியில் இவ்விடயத்தில் அதிக கவனம் செலுத்துவேன் என்பதோடு இவ்விடயம் தொடர்பில் ஹிஸ்புல்லாஹ்வின் நல்ல முயற்சிகளை பாராட்டுகிறேன். அவன் எந்த நேரத்திலும் என்னோடு தொடர்பு கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.


-- ஊடகப்பிரிவு

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »