நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அதன்படி, இன்று முதல் எதிர்வரும் சில நாட்களில் வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழையின் அளவு அதிகரிக்க கூடும்.
வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா, கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இடைக்கிடையில் மழை பெய்யும்.
மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் சாத்தியம் நிலவுகிறது.
அதேநேரம், இன்று பிற்பகல் வேளையில் நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
சில இடங்களில் 75 மில்லிமீற்றர் வரை மழை பெய்யக்கூடும்.
வடமத்திய, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் சில இடங்களில் பணியுடனான வானிலை எதிர்பார்க்கப்படுகிறது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில், தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு, வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளது.
இதேவேளை, கடற் பிராந்தியங்களில் நாட்டிற்கு தென்கிழக்காக தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதியில் தாழ் அமுக்கப் பிரதேசம் ஒன்று உருவாகியுள்ளது. எனவே, மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படுகின்ற எதிர்கால எதிர்வு கூறல்களை கவனத்திற் கொண்டு செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
ஹம்பாந்தோட்டை முதல் மட்டக்களப்பு ஊடாக திருகோணமலை வரையான கடற் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 - 40 கிலோமிற்றர் வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும்.
களுத்துறை முதல் புத்தளம் ஊடாக மன்னார் வரையான, அத்துடன் மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 கிலோமிற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும்.
நாட்டைச் சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
