கம்பளை - நாவலப்பிட்டி பிரதான வீதியில் ஹெட்காலை நாகொல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் அவரது தாயாரும் ஏழு வயது சகோதரரும் படுகாயமடைந்த நிலையில் கம்பளை போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கம்பளை உனம்புவ பிரதேசத்தைச் சேர்ந்த குலதுங்க முதியன்சாலகே அபிஷா நிஷாரா கெனுலி குலதுங்க என்ற மூன்று வயது சிறுமியே அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில் நேற்று (21) மாலை 5 மணியளவில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சிறுமியின் முன்பள்ளி ஆசிரியையின் கம்பளை மாவதுரயில் அமைந்துள்ள வீட்டில் இடம் பெற்ற பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வில் கலந்து கொள்வதற்காக மூவரும் மோட்டார் சைக்கிளில் சென்றபோதே குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது.
நாவலப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிஸ்ஸங்க நந்தன குலதுங்கவின் மனைவி தனது இரண்டு குழந்தைகளுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, எதிர் திசையில் இருந்து வந்த கார் ஒன்று நாகொல்ல பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் ஒன்றினை முந்திச் செல்ல முயன்ற சந்தர்ப்பத்திலேயே மோட்டார் சைக்கிளில் கார் மோதியுள்ளது.
கம்பளை வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட உயிரிழந்த சிறுமியின் பிரேத பரிசோதனையின்போது குழந்தையின் மார்புப் பகுதியில் ஏதோ ஒரு பொருள் மோதியதால் உள் இரத்தப்போக்கு ஏற்பட்டதாக சட்ட மருத்துவ அதிகாரி கூறியுள்ளார். மார்பு மற்றும் வயிற்றில் ஏற்பட்ட காயங்களால் மரணம் நிகழ்ந்தது என்று தீர்மானிக்கப்பட்டது.
விபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் நாவலப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 82 வயது காரின் சாரதியை ஹெட்காலை பொலிஸார் கைதுசெய்து கம்பளை நீதி மன்ற நீதவான் சரசி பரணமான முன் நிலையில் ஆஜர்படுத்தி நாளை வரை (23) விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
கலஹா செய்தியாளர்
