மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சைப்ரஸில் தனது தற்காப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில் பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மரின் உத்தரவின் பேரில் இரண்டு 'வைல்ட்கேட்' உலங்கு வானூர்திகள் இன்று சைப்பிரஸை வந்தடைந்துள்ளன.
சைப்ரஸிற்கு அனுப்பப்பட்டுள்ள இந்த வைல்ட்கேட் உலங்கு வானூர்திகள் நவீன ட்ரோன் எதிர்ப்பு தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளன. வான்வழி அச்சுறுத்தல்களை முறியடிக்க இவை முக்கியப் பங்காற்றும்.
இந்த உலங்கு வானூர்திகளுடன், HMS Dragon போர்க்கப்பலும் அடுத்த சில வாரங்களில் சைப்ரஸை வந்தடையும் என்று பிரதமர் ஸ்டார்மர் முன்னதாகத் தெரிவித்திருந்தார்.
மத்திய கிழக்கின் வான் பாதுகாப்புக்காக மேலதிகமாக நான்கு 'டைபூன்' போர் விமானங்களை கட்டாருக்கு அனுப்பவும் பிரித்தானியா நடவடிக்கை எடுத்துள்ளது.
பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள படங்களில், சைப்ரஸில் ரோயல் ஏர் ஃபோர்ஸ் C-17 விமானத்திலிருந்து உலங்கு வானூர்திகள் தரையிறக்கப்படும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
மத்திய கிழக்கு மோதல் பிராந்தியமெங்கும் பரவி வரும் சூழலில், பிரித்தானியாவின் இந்த நகர்வு பிராந்திய பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பதாகக் கருதப்படுவதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
