Our Feeds


Friday, April 10, 2026

Zameera

திருமண நிகழ்ச்சியை குறிவைத்து டிரோன் தாக்குதல் : 30 பேர் பலி


 (இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு)

வடக்கு ஆபிரிக்க நாடான சூடானில் நீடித்து வரும் உள்நாட்டு மோதல்களின் பின்னணியில், திருமண நிகழ்ச்சியை குறிவைத்து நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலில் குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

2021ஆம் ஆண்டு இராணுவப் புரட்சிக்குப் பிறகு, சூடானில் ஆட்சியை இராணுவம் கைப்பற்றியது. தற்போது, தலைவராக இராணுவ தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் (Abdel Fattah al-Burhan)  செயல்பட்டு வருகிறார்.

அதேவேளை, துணை இராணுவப்படையான Rapid Support Forces (RSF) அமைப்பின்  தளபதியான ஜெனரல் முகமது ஹம்டன் டகலோ ( Mohamed Hamdan Dagalo ) செயல்படுகிறார்.

இராணுவத்துக்கும் RSF அமைப்பிற்கும் இடையே அதிகாரப் போட்டி அதிகரித்ததன் விளைவாக, 2023 ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் கடும் ஆயுத மோதல்கள் வெடித்தன.

இதில் தலைநகரான கார்டூம் (Khartoum ) உள்ளிட்ட பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த மார்ச் மாதம், RSF கட்டுப்பாட்டில் இருந்த கார்டூமை இராணுவம் மீண்டும் கைப்பற்றியதாக தகவல்கள் வெளியாகின.

இந்த மோதல்கள் தொடர்ந்து நீடித்து வருவதால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 40,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக மதிப்பிடப்படுகிறது.

இந்நிலையில், டார்பூர் (Darfur) மாகாணத்தில் உள்ள குடும் நகரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியை குறிவைத்து டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட குறைந்தது 30 பேர் உயிரிழந்ததுடன், பலர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த தாக்குதலை Sudanese Armed Forces மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இதுகுறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வெளியாகவில்லை.

சூடானில் நீடித்து வரும் உள்நாட்டு மோதல்கள் மேலும் தீவிரமடைந்து வருவதால், பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து சர்வதேச அக்கறை அதிகரித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »