Our Feeds


Friday, April 10, 2026

Zameera

குமார ஜயகொடிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று விவாதத்திற்கு

 


வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று (10) பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் தரம் மற்றும் கொள்முதல் நடைமுறைகளில் காணப்பட்ட முறைகேடுகள் காரணமாக மின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.

இதனை அடிப்படையாகக் கொண்டே அமைச்சருக்கு எதிராக இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கடந்த மாதம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.

அமைச்சர் குமார ஜயகொடி அரச அதிகாரியாகப் பணியாற்றிய காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் அவருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள நீதிமன்ற வழக்கு குறித்தும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள்; கேள்வி எழுப்பவுள்ளனர்.

நிலக்கரி கொள்முதலில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து அண்மையில் வெளியான கணக்காய்வு அறிக்கை தொடர்பில் விவாதத்தின் போது விரிவாக ஆராயப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாராளுமன்றத்தில் அரசாங்கத்திற்கு பெரும்பான்மை பலம் இருப்பதால், இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடிக்க முடியும் என ஆளுந்தரப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இன்றைய விவாதத்தின் முடிவில் பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »