Our Feeds


Wednesday, April 8, 2026

Zameera

NDB வங்கி நிதி மோசடி: முகாமையாளர் உட்படப் பலர் கைது


 NDB வங்கியின் உட்புற நிதி மோசடிச் சம்பவம் தொடர்பாக அந்த வங்கியின் முகாமையாளர் ஒருவர் உட்படப் பலரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து NDB வங்கி விடுத்துள்ள அறிக்கையில் பின்வரும் விடயங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன:

இந்தச் சம்பவத்தினால் எந்தவொரு வாடிக்கையாளரின் கணக்குகளுக்கோ அல்லது வைப்புகளுக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. வங்கியின் அனைத்துச் சேவைகளும் வழமை போல் தடையின்றி முன்னெடுக்கப்படுகின்றன.

வங்கியின் குறிப்பிட்ட ஒரு செயல்பாட்டுப் பிரிவுக்குள் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த இந்த மோசடியுடன் தொடர்புடைய ஊழியர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் உடனடியாகப் பணியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர். அத்துடன் சாட்சியங்கள் மற்றும் அறிக்கைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

குறித்த பிரிவு பலத்த கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், வங்கியின் உட்புறக் கட்டுப்பாடு, அறிக்கையிடல் மற்றும் பாதுகாப்பு கட்டமைப்புக்கள் மேலும் வலுப்படுத்தப்பட்டு வருகின்றன.

மிக மோசமான சூழ்நிலையைக் கருதினாலும்கூட, இந்தச் சம்பவத்தினால் ஏற்படக்கூடிய நட்டம் 2026 மார்ச் 31 உடன் முடிவடையும் காலாண்டில் சுமார் 4.0 பில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. 

எனினும், வங்கியின் நிதி நிலைமை ஸ்திரமாக உள்ளது. 2025 ஆம் ஆண்டில் வங்கி 11 பில்லியன் ரூபா நிகர லாபத்தை ஈட்டியுள்ளதுடன், 2026 மார்ச் 31 அளவில் வங்கியின் மொத்த சொத்து தளமானது 990 பில்லியன் ரூபாவாகும்.

இச்சம்பவம் குறித்து இலங்கை மத்திய வங்கிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், தேவையான ஒழுங்குமுறை மேற்பார்வைகளும் உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன. 

ஒழுங்குமுறை அறிவுறுத்தல்களின்படி, 2026 ஏப்ரல் 6 ஆம் திகதி வழங்கப்படவிருந்த பண ஈவுத்தொகை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. எனினும், பங்குகளை ஈவுத்தொகையாக வழங்கும் திட்டம் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படும்.

இச்சம்பவம் குறித்து சுயாதீனமான தடயவியல் கணக்காய்வு ஒன்றை மேற்கொள்வதற்காக சுயாதீன புலனாய்வு நிபுணர் ஒருவரை நியமிக்க பணிப்பாளர் சபை தீர்மானித்துள்ளது.

வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையைப் பாதுகாப்பதில் தாம் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்துள்ள வங்கி, உறுதிப்படுத்தப்படாத தகவல்கள், வதந்திகள் அல்லது ஊகங்களைப் பரப்புவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »